Published : 05 Sep 2020 04:21 PM
Last Updated : 05 Sep 2020 04:21 PM
உலகில் பல தொழில்கள் செய்தாலும் உழவும், ஆசிரியப் பணியுமே புனிதமானவை. ஆனால், அந்தச் சேவையைத் தொழில் என்று கூறும் அளவுக்கு கால ஓட்டத்தில் எல்லாப் புனிதங்களும் அடித்துச் செல்லப்பட்டன என்பதுதான் பெரும் சோகம். உழவுத் தொழில் மக்களின் பசிப்பிணிக்கு மருந்தாக விளங்குகிறது. ஆசிரியர் சேவை, தொழிலாக மாறிப் போனாலும் அறியாமை என்ற பிணியைப் போக்கும் மேன்மை பொருந்தியதாகவே திகழ்கிறது.
''பிச்சை புகினும் கற்றல் நன்றே!''- என்ற அதிவீரராம பாண்டியன் கூற்றின்படி, கல்வி எவ்வளவு தூரம் ஒருவருக்குத் தேவை என்பது புரியும். அந்தக் கல்வியை எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல், தாய்ப்பாலாக ஊட்டும் பணிதான் ஆசிரியர் பணி. இப்படி, கல்வி என்னும் தாய்ப்பாலில் அறிவு என்னும் ஆற்றலையும் சேர்த்தே நாங்கள் புகட்டுகிறோம்.
வெறுமனே ஊதியத்திற்காகச் செய்கின்ற பணி அல்ல ஆசிரியர் பணி. எவ்வளவு காலமானாலும், ''இவரிடம்தான் நான் கல்வி கற்றேன். இவரால்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்தேன்'' என்று நினைவுகூர்ந்து போற்றப்படும் மகத்தான பணியே ஆகச் சிறந்த ஆசிரியர் பணி.
வழக்கமான சடங்கல்ல
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர்தான் ஆசிரியர். தத்துவ மேதை ராதாகிருஷ்ணன், மைசூரிலிருந்து கல்கத்தாவுக்கு மாறுதல் பெற்றுச் சென்றபோது, சாரட் வண்டியில் பூட்டப்பட்ட குதிரைகளை அவிழ்த்துவிட்டு மாணவர்களே அவரை வண்டியில் அமரச் செய்து புகைவண்டி நிலையம் வரை இழுத்துச் சென்ற நிகழ்வு மிகச் சிறந்த ஆசிரியர், மாணவர்கள் மனதில் எந்நாளும் நிலைத்திருப்பார் என்பதற்குச் சான்று. அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5-ஐ, கடந்த 1962-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அது, வழக்கமான சடங்கல்ல. மிகத் தூய்மையான பணிக்கு நாம் கிரீடம் சூட்டும் விழா.
ஆசிரியர் செய்ய வேண்டியது
ஒரு மாணவனுக்கு முதல் ஹீரோ அவனுடைய ஆசிரியரே. குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பது என்பது, சாதாரண செயல் அல்ல. குழந்தைகளை அடித்தோ, மிரட்டியோ சொல்லிக் கொடுக்க இயலாது. அப்படிச் செய்தால், ஆரம்பத்திலே குழந்தைகள் பாடத்தையும், ஆசிரியர்களையும், ஏன் பள்ளிக் கூடத்தையும் கண்டு வெறுக்க ஆரம்பிப்பார்கள். பிறகு, கல்வி என்றாலே கசப்பான பொருள் என்று ஒதுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அதனால், கல்வியை எளிமையான முறையில் குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதமாக ''ஆடல், பாடலுடன் கூடிய கலந்துரையாடல், களப்பயணம் செல்லுதல், உற்று நோக்கல், தானே கற்றல், செய்து கற்றல்'' என்ற பல்வேறு முறைகளைப் பின்பற்றி கற்றலை எளிமையாக மாணவர்களுக்குத் தருவது ஒவ்வொரு ஆசிரியரும் செய்ய வேண்டிய தலையாய பணி.
ஒவ்வொரு மாணவனின் மனமும் வெவ்வேறானது. அது, எப்போதும் அச்சத்திற்கு ஆட்பட்டது. அதை, உணர்ந்து மனதைப் பண்படுத்தினால் மட்டுமே கல்வி என்ற நற்பயிரை விதைத்து நல்ல சமுதாயம் என்ற கனியைப் பெற முடியும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
நல்ல ஆசிரியர்
''நல்ல பணி, நல்ல ஊதியம், நிறைய விடுமுறை, கணக்கற்ற சலுகை என்பதற்காக இப்பணியைத் தேர்ந்தெடுக்கிறார்'' என்று, சமூக வீதிகளில் பேசப்படுவதை உண்மையாக்காமல், காலந்தோறும் ஆசிரியர்களுக்கே உள்ள மகத்துவமான நற்பண்பின் அடிப்படையில், நாம் பெறும் ஊதியத்தை விடக் கூடுதலாக ஊழைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. “உங்கள் உழைப்பின் பெருமையைப் பிறர் உணரட்டும்” என்ற ஆபிரகாம் லிங்கனின் கூற்றை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
“ஒரு பள்ளிக்கூடம் திறந்தால், நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்” என்ற உண்மையை உணர்ந்து, நல்ல குடிமக்களை நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இதைத்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆசிரியராக இருந்து வாழ்ந்து காண்பித்தார். அதன் காரணமாகவே, நாம் அவர் புகழ் பாடுகிறோம். இன்று, நாமும் அவர் வாழ்ந்த வாழ்க்கையின், உழைப்பின் பாதியாக இருந்தால்கூட, நாளைய உலகம் நம் புகழ் பாடும். ஆனால், எந்த ஆசானும் புகழை எதிர்நோக்கி எதையும் செய்வதில்லை. ஆனால், காலத்தில் நம் பெயரும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு, கடமை உணர்வு, அயரா உழைப்பு தந்து நல்லாசிரியராகத் திகழ ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
அறம் செய்வோம்! அறிவை வளர்ப்போம்! தமிழ் மண்ணில் கல்வி வாசம் என்றென்றும் வீசட்டும்!
-ஆ.மார்க்ரெட், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், வாட்டத்திக்கோட்டை,
பேராவூரணி ஒன்றியம், தஞ்சை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT