Published : 05 Sep 2020 03:23 PM
Last Updated : 05 Sep 2020 03:23 PM
நடிகர் விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் மீசைவைத்தவர் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது, எம்ஜிஆர் எம்ஜிஆர் தான் என்று தெரிவித்துள்ளார்.
எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் பட போஸ்டரில் எம்ஜிஆர் படத்தில் விஜய் படத்தை வைத்தும், ரிக்ஷாக்காரன் படபோஸ்டரில் எம்ஜிஆர் பட போஸ்டரில் எம்ஜிஆருக்கு பதில் விஜய் படத்தை வைத்து, “எம்ஜிஆரின் மறு உருவமே, எங்கள் மாஸ்டர் வாத்தியாரே தமிழகம் அழைக்கிறது தலைமையேற்க, 2021-ல் உங்கள் வரவை காணும் தமிழகம். வாங்க தலைவா என தேனி மாவட்ட ரசிகர் மன்றம் அடித்துள்ள போஸ்டர் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டப்பட்டு பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும்வேளையில் போஸ்டர் விவகாரம் சூடு பிடித்துள்ளது. அதுவும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆராகவே சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சூட்டைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் சூடாக பதிலளித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது:
கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர் வ.உ.சி . இன்று அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறோம். இன்றைய அரசியலில் கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என எல்.முருகன் எப்படி சொல்ல முடியும்.
எங்களுக்கு கட்டளையிட முடியாது. யார் அவர் கட்டளையிட, யார் அவர்கள் கட்டளையிட. அமைச்சர்கள் பேசக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார். நாங்கள் கூட்டணி தர்மத்தை முறையாக கடைபிடிக்கிறோம். அதிலிருந்து ஒரு அங்குலம்கூட விலகவில்லை.
சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் அதில் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது அரசின் நிர்வாக காரணங்களுக்காவே. எந்த அழுத்தமும் எங்களை நிர்பந்திக்க முடியாது”. என்று தெரிவித்தார்.
மதுரையில் நடிகர் விஜய்-யை எம்ஜிஆராக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு,
“கப்பலோட்டியவர்கள் கப்பலோட்டிய தமிழன் வஉசி ஆகிவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா 2 பேர் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது, அவர்களைப்போல் இனி ஒருவர் வரவும் முடியாது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல் மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது.
செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்”.
என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT