Published : 05 Sep 2020 01:56 PM
Last Updated : 05 Sep 2020 01:56 PM
கரோனா தொடர்ந்து பரவுவதால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி விரைவில் திறக்கப்பட உள்ளது.
கரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிப்பின் அடிப்படை யில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருவோரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவிலிருந்து மீண்டோரிடம் ரத்த பிளாஸ்மாவை எடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்தச் சிகிச்சைக்காக பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் பரிசோதனை முறையிலேயே பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னையைப்போல் மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், தமிழக சுகாதாரத்துறை மதுரை, கோவை, நெல்லையில் பிளாஸ்மா வங்கி தொடங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகிய வற்றிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
கரோனா தொற்று நீடிக்க வாய்ப்புள்ளதால் மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் பிளாஸ்மா வங்கியை நிரந்தர மாகத் தொடங்க முயற்சி மேற் கொண்டுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை முறையில் ரத்த வங்கியுடன் இணைந்து பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவ மனையில் தொற்று பாதித்து மீண்டோரிடம் இருந்து பிளாஸ்மாவைச் சேகரிக்க ஒரு பிளாஸ்மா தெரபி உபகரணம் மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு தினமும் 3 பேரிடம் பிளாஸ்மா தானம் பெறப்படுகிறது. தற்போது வரை பிளாஸ்மா வங்கி தொடங்க அனுமதி கிடைக்காவிட்டாலும் தொற்றிலிருந்து மீண்டோரிடம் பிளாஸ்மா சேகரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. அதனால், கரோனா தொற்றுக்கு மற்ற சிகிச்சைகளுடன் பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கும் பணி தொடங்கி உள்ளது.
மருத்துவர்கள் கூறியதாவது: தொற்றில் இருந்து மீண்டோரின் உடலில் அத்தொற்றைப் போராடி அழிக்கும் எதிர் அணுக்கள் உருவாகியிருக்கும் என்பது மருத்துவத் துறையின் அடிப்படைக் கோட்பாடு. இதன் அடிப்படையிலேயே கரோனா விலிருந்து குணமடைந்தோரின் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளி களின் உடலில் செலுத்தப்படும் போது, அவர்கள் உடலில் உள்ள கரோனா தொற்றை அழிக்க அது உதவியாக இருக்கிறது. அதனால் தொற்றிலிருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மா சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட் டோருக்குச் செலுத்தப்படுகிறது.
பிளாஸ்மாவை தேவையான அளவு இருப்பு வைக்க மருத்துவ மனை நிர்வாகமே பிளாஸ்மா வங்கியைத் தொடங்கியுள்ளது. தொற்றிலிருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா தானம் கொடுக்க கவுன்சலிங் வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலானோர் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவில்லை. அதனால் எதுவும் ஆகிவிடுமோ என்ற தவறான எண்ணம் இருக்கிறது.
ரத்த தானம் போல இதுவும் ஒன்றுதான். விரைவில் மத்திய அரசு அனுமதி வழங்கியதும் நிரந்தரமாகவே பிளாஸ்மா வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment