Published : 05 Sep 2020 01:14 PM
Last Updated : 05 Sep 2020 01:14 PM
கரோனா தொற்றுப் பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு நீதிமன்றங்கள் திறக்கப்படுவதை அடுத்து வழக்கறிஞர்கள் கருப்புக் கோட்டு, கவுன் அணிவதிலிருந்து விலக்குக் கோரிய மெட்ராஸ் பார் அசோசியேஷன் கோரிக்கையை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன.
அவசர வழக்குகள் மட்டும் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வழக்குகள் தேக்கம், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களால் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.
தற்போது தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை நீதிமன்றங்களில் நேரடியாக வழக்குகளை விசாரிக்க, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 மூத்த நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழுவால் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவடங்களில் உள்ள நீதிமன்றங்களில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடியாக வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை வழங்கி நிலையில், நீதிமன்றங்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இரு நீதிபதிகள் கொண்ட 6 அமர்வுகளில் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கவுன் அணிய விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த மே மாதம் 14-ம் தேதி இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த நிர்வாக உத்தரவில், காணொலி மூலம் ஆஜராகின்ற வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வெள்ளை நிற மேல்சட்டையுடன், உரிய நெக் பேண்ட் அணிந்து வழக்குகளில் ஆஜராக அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT