Last Updated : 05 Sep, 2020 12:37 PM

 

Published : 05 Sep 2020 12:37 PM
Last Updated : 05 Sep 2020 12:37 PM

சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்கள், கண்களை மறைக்கும் புழுதி: விபத்துக்கு வழிவகுக்கும் திருச்சி- கரூர் சாலை விரிவாக்கப் பணி - நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

விரிவாக்கப்பணி நடைபெறும் கரூர் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு ஏற்பட்டுள்ள புழுதி | படங்கள்: அ.வேலுச்சாமி

திருச்சி

திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் குடமுருட்டி செக்போஸ்ட் முதல் ஜீயபுரம் வழியாக திண்டுக்கரை வரையிலான 11 கி.மீ சாலை மிகவும் குறுகிய அகலத்துடன் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதைத் தவிர்க்க இச்சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி அப்பகுதிகளிலுள்ள பல்வேறு கிராம மக்கள் இணைந்து பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து திருச்சி- கரூர் சாலையை அகலப் படுத்தும் பணிக்கு ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் குடமுருட்டி முதல் திண்டுக்கரை வரையிலான சாலையை அகலப்படுத்துதல், சாலையோர தடுப்புகள் மற்றும் பக்கவாட்டுச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங் காங்கே சாலைகளின் ஓரத்தில் பல அடி ஆழத்துக்கு குழிதோண்டி, அவற்றில் மண்ணைக் கொட்டி நிரப்பி வருகின்றனர். ஆனால், இப்பணிகள் நடைபெறும் இடத்தில் முறையான தடுப்புகள், அறிவிப்பு மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப் படவில்லை. அதற்கு பதிலாக பள்ளங்களுக்கு அருகே மண் மூட்டைகளை ஆங்காங்கே அடுக்கி வைத்துள்ளனர். அதிலும் பிரபதிலிப்பான் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் சாலையிலிருந்து தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல கம்பரசம்பேட்டை கோயிலில் இருந்து முத்தரசநல்லூர் வரையிலான சாலையை முழுவதுமாக பெயர்த்து எடுத்து விட்டு, புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில், விரிவாக்கப் பணி கள் காரணமாக கரூரிலிருந்து திருச்சிக்கு வரக்கூடிய வாகனங் கள் குளித்தலை வழியாக மாற்றி அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், திருச்சியிலிருந்து கரூர் வழித்தடத்தில் கனரக வாகனங் களை தொடர்ந்து அனுமதிப்பதால், நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே சாலையை இடது மற்றும் வலது என பிரித்து விரிவாக்கம் செய்யாமல், ஒரே நேரத்தில் இரு பக்கங்களிலும் விரிவாக்கப் பணிகளை மேற் கொள்வதால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப் படுகின்றன. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர் பரிசல்துறை அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தையொட்டி தடுப்பு இல்லாமல் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.

மேலும், சிமென்ட் கலவையுடன் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் மீது போதிய அளவு தண்ணீர் ஊற்றாததால், அவை சாலை முழுவதற்கும் புழுதியாக மாறி யுள்ளது. இதனால் எதிரில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாத நிலை உள்ளதால், விபத்து அபாயமும் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் கூறும்போது, ‘‘சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை உள்ளது. இவ்விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளின் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் கூறும்போது, ‘‘ரூ.55 கோடி செலவில் இங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன? காவிரி ஆற்றின் கரையில் எங்கெங்கு தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது? எத்தனை இடங்களில் மையத் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன? என எந்த விவரத்தையும் அதிகாரி கள் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்து வருகின்றனர். இந்த பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும், ஒப்பந்ததாரர் யார் என்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகூட வைக்க வில்லை. இதனால், முறைகேடு நடைபெறுகிறதோ என்ற சந்தே கம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சாலைப் பணிகள் முடியும்வரை ஜல்லிக் கற்கள் மீது அடிக்கடி தண்ணீர் ஊற்றி புழுதி பரவாமல் இருக்கவும், சாலையோர பள்ளங்களுக்கு அருகே வைக்கப்பட்டுள்ள மண் மூட்டைகள் மீது பிரதிபலிப்பான் ஒட்டவும், விபத்து ஏற்பட வாய்ப் புள்ள பகுதிகளில் ஜல்லிக் கற்களை உடனுக்குடன் சுத்தப்படுத் தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அகற்றப்பட்ட எச்சரிக்கை பலகை களுக்கு பதிலாக புதிய பதாகைகள் விரைவில் வைக்கப்படும்’’ என் றனர்.

‘மீம்ஸ்’களால் அகற்றப்பட்ட எச்சரிக்கை பலகைகள்

சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிநெடுகிலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. அவற்றில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை என்பதற்கு பதிலாக, டு-வை விட்டுவிட்டு நெஞ்சாலைத் துறை எனக் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். இதை புகைப்படம் எடுத்து, துறையின் பெயரைக்கூட சரிவர எழுதாமல் உள்ளனர் என சமூக வலைதளங்களில் சிலர் மீம்ஸ் வெளியிட்டனர். அதையடுத்து அந்த அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை திருத்தப்பட்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாமல் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x