Published : 05 Sep 2020 12:20 PM
Last Updated : 05 Sep 2020 12:20 PM

கல்லூரி மாணவர்கள் தேர்வு குறித்த அரசின் அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை

தமிழக கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து தேர்ச்சி அறிவித்தது யுஜிசி விதிகளுக்கு முரணானது என்றும், அப்படி அறிவிக்க அரசுக்கு அதிகாரமில்லை என்றும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட முடியாத நிலையில் பிளஸ் 2 தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவித்தார், பின்னர் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களைத் தவிர்த்து பிற ஆண்டுகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதேபோன்று அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறியியல் பயிலும் மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இந்நிலையில் தமிழக உயர் கல்வித்துறையின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “யுஜிசி விதிகளுக்கு எதிராக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அவ்வாறு அறிவிக்க உயர் கல்வித்துறை செயலாளருக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது. பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றிற்கு மட்டுமே தேர்வை நடத்தவும் ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி யுஜிசி தேர்வுகள் தொடர்பாக விதிமுறைகளைப் புறக்கணிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டவிரோதம்.

தனித் தேர்வர்களுக்கான தேர்வை அறிவித்துவிட்டு, அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சியை அறிவிப்பது என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது. இதனால் கலை, அறிவியல், டிப்ளமோ, இன்ஜினீயரிங், எம்.சி.ஏ. படிப்பவர்கள் மட்டுமே பலன் பெற்றுள்ளனர். சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியோருக்குப் பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. அரியர் தேர்வுகளைத் தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தலாமே தவிர ரத்து செய்ய முடியாது.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதாமல் ஆகஸ்ட் 26-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். யுஜிசி வழிகாட்டுதளின் படி அரியர் தேர்வுகளை எழுத உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x