Published : 06 May 2014 08:11 AM
Last Updated : 06 May 2014 08:11 AM

தீவிரவாதி ஜாகீர் உசேனுக்கு 3 நாள் போலீஸ் காவல்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜாகீர் உசேனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் செயல்பட்டதாகக் கூறி இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை புழல் மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், எழும்பூர் பெருநகர 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாகீர் உசேனை திங்கள்கிழமை ஆஜர்படுத்திய க்யூ பிரிவு போலீசார், அவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாகீர் உசேன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், 9 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 3 நாட்கள் மட்டும் ஜாகீர் உசேனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

விசாரணை முடிந்த பிறகு வரும் 8-ம் தேதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x