Published : 04 Sep 2020 08:44 PM
Last Updated : 04 Sep 2020 08:44 PM

காவிரி குறித்த கேள்விகளுக்கு இந்தியில் விடையளிப்பதா?- மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்துக்கு மணியரசன் கண்டனம்

சென்னை

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்ட காவிரி குறித்த கேள்விகளுக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் இந்தியில் விடையளித்துள்ளதற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணியரசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்துகொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் ஜூன் – ஜூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்துகொள்ளவும், மத்திய அரசின் நீர்வளத் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் அனுப்பி இருந்தேன்.

அதற்கு விடையளித்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் இந்தி மொழி - கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ அல்ல! தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 ( 3 )-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.

சட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியில் விடை அளிப்பது சட்ட விரோதச் செயல்! அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அலுவல் மொழிச் சட்டம், தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் ஆகிய மூன்றுக்கும் எதிரான செயல்!

மக்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கவலையோடு நான் கேட்ட கேள்விகளுக்கு – எனக்குத் தெரியாத மொழி மட்டுமின்றி – ஒற்றை ஆட்சிமொழியாக எந்தச் சட்டத்தின் கீழும் இல்லாத இந்தி மொழியில் விடையளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.

எனது கண்டனத்தை மத்திய நீர் வளத்துறைக்கும் கடிதம் மூலம் அனுப்பியுள்ளேன்.

இதுபோல், தொடர்ந்து நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்துக் கொண்டுள்ளது. இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல – தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கும் செயல்கள். தமிழை நீக்கி விட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு வந்து நிலைநாட்ட வேண்டும் என்ற மோடி அரசின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு என்று எண்ணாமல், தனது மக்களுக்கும், மொழிக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை உணர்ந்து, டெல்லி அரசிடம் உரியவாறு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் தமிழ், புதுடெல்லியுடன் செய்தித்தொடர்புக்கு ஆங்கிலம் என்ற சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மணியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x