Last Updated : 08 Sep, 2015 04:36 PM

 

Published : 08 Sep 2015 04:36 PM
Last Updated : 08 Sep 2015 04:36 PM

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் விவகாரத்தில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ஆட்சியர்?

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடை பெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனுக்கள் குவிந்தன.

தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தூர்வாரும் பணிகள் தொடங்கின. கடந்த ஜூன் 30-ம் தேதி ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிய நிலையில், மணல் அள்ளும் பணிகள் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கங்கைகொண்டானில் குவிப்பு

ஆனால் தூர்வாரும் பணி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்ச மில்லை. தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ள 5.1 கி.மீ. தொலைவையும் 5 பிரிவாக பிரித்து பணி நடைபெறுகிறது. அணையை ஒட்டிய முதல் பிரிவில் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. மற்ற பகுதிகளில் மட்டுமே தூர்வாரும் பணி நடக்கிறது.

இங்கு அள்ளப்படும் மணல், லாரிகளில் கங்கைகொண்டான் கொண்டு செல்லப்பட்டு அங்கு குவித்து வைக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றாமல் மணல் மட்டுமே வேக வேகமாக எடுக்கப்படுகிறது. வண்டல் மணல் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதலில் கூறிய அதிகாரிகள் தற்போது முடியாது என்கின்றனர்.

மணல் யாருக்கு?

தூர்வாரும் பணியை தனியார் கள் ஒப்பந்தம் எடுத்துள்ளதால் மணல் அவர்களுக்கு சொந்தமானது எனக்கூறும் அதிகாரிகள், அணைப் பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், அந்த பகுதியில் தூர்வார உயர்மட்ட டெண்டர் கமிட்டி ஒப்புதல் அளித்தால் மட்டுமே பணியை தொடங்க முடியும் என விளக்கம் அளிக்கின்றனர்.

அணையை தூர்வாருவதற்கு பதிலாக மணல் கொள்ளையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணிகள் நடைபெறுவதாக கூறி ீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி மேம்பாட்டுக் குழுவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குவிந்த மனுக்கள்

அணை தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பல்வேறு தரப்பினரும் புகார் மனு அளித்தனர். ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி மேம்பாட்டுக் குழுவினர் அதன் தலைவர் புதுக்குடி எம்.எஸ். ராஜா தலைமையில், ஆட்சியர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அணைப் பகுதியில் இருந்து தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

எம்.எஸ். ராஜா கூறும்போது, ‘ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியில் நடைபெறும் முறைகேடுகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில் வரும் 12-ம் தேதி முதல் திருவைகுண்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளோம்’ என்றார் அவர்.

வெள்ளை அறிக்கை

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் சி.நயினார் குலசேகரன், ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில், ‘ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு படி நடைபெறவில்லை. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அணை தூர்வாரும் பணி தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையை முழு விபரத்துடன் ஆட்சியர் வெளியிட வேண்டும்’ என்றார் அவர்.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தா.மி.பிரபு தலைமையில் அக்கட்சியினர், தூர்வாரும் பணி என்ற பெயரில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், ஊழல் தடுப்பு மற்றும் மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் அதன் நிர்வாக செயலாளர் எம். சிந்தா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், தூர்வாரும் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டிருந்தது.

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி தொடர்பாக மனு கொடுக்க ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

விவசாயிகளின் கோரிக்கைகள்

* முதலில் அணைப் பகுதியில் இருந்து தூர்வார வேண்டும்.

* அணையில் உள்ள 18 மதகுகளையும் சீரமைக்க வேண்டும்.

* தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

* குடிநீருக்கான உறைகிணறை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் மணல் அள்ளக்கூடாது.

* தூர்வாரும் பணி நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.

* தூர்வாரும் போது கிடைக்கும் மணலை அரசு நிர்ணயித்த விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கும் விவசாயிகள், இவற்றில் ஒன்று கூட அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x