Published : 04 Sep 2020 04:08 PM
Last Updated : 04 Sep 2020 04:08 PM
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப் 4) கூறியதாவது:
"தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து நேற்று முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 20 முதல் 42 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. வரும் 10 ஆம் தேதிக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தேவை என முதல்வர் கூறியுள்ளார். இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் ஒரு சீனியர் மருத்துவரை நியமித்துள்ளோம். அவர் அந்தக் கல்லூரியில் தினமும் ஆய்வு செய்து, கல்லூரிக்கு என்ன தேவை உள்ளது? நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறதா? எத்தனை பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது? உணவு சரியாகக் கொடுக்கப்படுகிறதா? நோயாளிகளிடம் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்வார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்படும் பரிசோதனைக்கான பணத்தைக் கூட சுகாதாரத்துறை மூலம் தருவதாகக் கூறியுள்ளோம். புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணத்திற்காக யோசிக்காமல் மக்களுக்குச் சேவை செய்ய இதை ஒரு சந்தர்ப்பமாக நினைக்க வேண்டும்.
அரசால் முடிந்தவரை உதவி செய்வோம். அதற்கு மேல் உதவி செய்ய முடியாது. தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உணவுக்கான செலவு, கவச உடை, மருந்து ஆகியவற்றைக் கொடுக்கிறோம். இதற்கு மேல் எங்களிடம் எதுவும் கேட்கக் கூடாது என்றும் கூறியுள்ளோம்.
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் குறைந்தபட்சம் தினமும் 100 பரிசோதனைகள் செய்ய வேண்டும். தற்போது வரை 2 கல்லூரிகளில் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அடுத்த 2 நாட்களில் மேலும் 2 கல்லூரிகள் கரோனா பரிசோதனை செய்வதாகக் கூறி இருக்கின்றன. வரும் 10 ஆம் தேதிக்குள் புதுச்சேரியைச் சேர்ந்த 100 பேருக்கு தினமும் பரிசோதனை செய்ய வேண்டும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். அவர்களும் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
பி.எஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் படித்தவர்களை தன்னார்வலர்களாகத் தயார் செய்து, ஒரு வீட்டில் எத்தனை பேர் வயதானவர்கள், 10 வயதுக்குள் எத்தனை பேர் உள்ளனர் எனக் கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு பகுதியாகப் பரிசோதனை செய்வதற்கான யோசனையும் உள்ளது. கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கண்டிப்பாக தொற்று படிப்படியாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
2 நாட்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைச் சென்று பார்க்க உள்ளேன். வீட்டில் தனியாக அறை, கழிப்பறை இருக்கிறது. நான் வீட்டிலேயே தனிமையில் இருப்பேன் என்கிறார்கள். நம்முடைய குழுவினர் 24 மணி நேரம் சென்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க முடியாது. குழுவினர் வரும்போது மட்டும் தனிமையில் இருக்கின்றனர்.
மற்ற நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசுவது, சாப்பிடுவது என இருக்கின்றனர். இதனால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நிறைய பேருக்குத் தொற்று வர வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் தனியாக அறை, கழிப்பறை இருப்பவர்களை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். மற்றவர்களை மருத்துவமனையில் அனுமதியுங்கள் எனக் கூறியுள்ளேன்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT