Published : 04 Sep 2020 02:12 PM
Last Updated : 04 Sep 2020 02:12 PM
புதுச்சேரி முதல்வர் அலுலகத்தில் ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் அடங்கிய மத்தியக் குழு கலந்து ஆலோசித்த தகவல்களை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் வெளியிட்டதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மத்தியக் குழு தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக கிரண்பேடி காட்ட முயல்வதாகவும் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசு மத்தியக் குழுவை நியமித்தது. இக்குழுவில் ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள், ஜிப்மர் மருத்துவர்கள் என ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தொடர் ஆய்வுக்குப் பிறகு முழு விவர அறிக்கையை கடந்த 2-ம் தேதி அரசுக்கு வழங்கினர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ், நேற்று (செப். 3) மத்தியக் குழுவினர் கலந்துரையாடல் விவரங்களை வெளியிட்டது.
அதில், "கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் ரத்தத்தின் நோய் எதிர்ப்பான் பரிசோதனை கணக்கெடுப்பை நடத்தினோம். அதில், புதுச்சேரி மக்களில் 95 சதவீதம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏனாமுக்குச் சென்று புதுச்சேரிக்கு இன்று (செப். 4) திரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இதனை விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஐசிஎம்ஆர் மத்தியக்குழுவினர் முதல்வருடன் கலந்துரையாடியபோது பேசிய விவரக்குறிப்புகள் 'மினிட்ஸ்' ஆகச் சேகரிக்கப்பட்டன. நான்கு பக்கம் கொண்ட அவ்விவரங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. இது தவறானது. அந்த விவரங்களில் மூன்றாவது பக்கத்தில் முதல்வர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகக் கூட்ட ஆலோசனை விவரங்களை அவர்கள் வெளியிடாமல் ராஜ்நிவாஸ் வெளியிட்டது சரியானது அல்ல. மேலும், ஆலோசனையில் பல விவரங்கள் பேசி பதிவு செய்வது வழக்கம். ஆனால், விவாதத்தில் தெரிவிக்கும் கருத்துகள் இறுதியானவை அல்ல.
மத்தியக் குழு தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காட்ட முயல்கிறார். 95 சதவீதம் பாதிப்பு என்பது நாடு முழுவதும் அதிகரித்து இறுதியான பிறகுதான் அதிகாரபூர்வமாகச் சொல்ல முடியும். தற்போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில்தான் புதுச்சேரியில் உள்ளது. ஆளுநர் மாளிகை இவ்விஷயத்தை முன்னிலைப்படுத்துவது தவறானது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முயல்கிறோம்" என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT