Published : 04 Sep 2020 12:39 PM
Last Updated : 04 Sep 2020 12:39 PM
வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டி, கூடுதல் வட்டிகளை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 4) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு காரணமாக மார்ச் 24 முதல் நாடு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களுக்காக, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மார்ச் முதல் ஆகஸ்ட் முடிய 6 மாதங்களுக்கு ஒத்திவைத்தன.
ஒத்திவைக்கப்பட்ட 6 மாத தவணை காலத்திற்கு, அசல் கடன் மீதான வட்டிக்கு, கூடுதல் வட்டி போட்டு வங்கிகள் வசூலிக்கக் கூடாது; ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் இன்னும் இயப்பு நிலை திரும்பவில்லை என்பதால் மாதத் தவணை செலுத்த ஒத்திவைப்பு காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல முறையீட்டு மனுக்கள் தாக்கலாகியுள்ளன.
இந்த முறையீட்டு மனுக்களை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான மூவர் அமர்வு மன்றம் விசாரித்து வருகின்றது.
இந்த வழக்கு விசாரணையில் வங்கிகள், கடன்கள் மீதான வட்டிக்கு, வட்டி போட்டு வசூலிப்பதை தடுக்க முடியாது; கூடாது என மத்திய அரசு வாதாடி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேரிடர் கால நிவாரண உதவிகள் செய்ய வேண்டிய கடமைப் பொறுப்புகளை சுட்டிக் காட்டிய பின்னரும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் குரலில் வாதாடி வருவது இரக்கமற்ற செயலாகும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.
மத்திய அரசின் உயர்மதிப்பு பண நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, நாடு முடக்கம் போன்ற நடவடிக்கைகளால் நொடித்து போயிருக்கும் சிறு, குறு தொழில் பிரிவினர் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும், நுண்கடன் நிதி நிறுவனங்களில் மற்றும் சுயஉதவிக் குழுக்களில் அடித்தட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் பெற்றுள்ள கடன்களையும், விவசாயிகளின் வேளாண்மைக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
நடுத்தரத் தொழில் பிரிவினர் வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டி, கூடுதல் வட்டிகளை முழுமையாக தள்ளுபடி செய்து, கடன் வசூல் மாத தவணை ஒத்திவைப்பு காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ரிசர்வ் வங்கியினையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT