Published : 04 Sep 2020 11:05 AM
Last Updated : 04 Sep 2020 11:05 AM

ஆசிரியர்கள் தினம்: ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம்; அன்புமணி வாழ்த்து

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (செப். 4) வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி:

"கடவுளை விட உயர்வான இடத்தில் வைத்து வணங்கப்படும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'ஏணி தோணி அண்ணாவி நாரத்தை' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். ஏணி என்பது அனைவரையும் மேலே ஏற்றி விட்டு, அதே இடத்தில் நின்று கொண்டிருக்கும். தோணி என்பது நீர் நிலைகளை கடக்க நினைக்கும் அனைவரையும் கரையேற்றி விட்டு, தண்ணீரிலேயே கிடக்கும்.

அதே போல் அன்னாவி, அதாவது ஆசிரியர் தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை உயர்ந்த இடத்திற்கு அனுப்பி விட்டு, அவர் மட்டும் அதே இடத்தில் இருப்பார். நார்த்தங்காய் வயிற்றுக்குள் சென்றால் மற்ற உணவுப் பொருட்களை செறிக்க வைத்து விட்டு, அது மட்டும் செறிக்காமல் வயிற்றில் இருக்கும். ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம் என்பதை 4 வார்த்தைகளில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள். அது தான் ஆசிரியர் சமுதாயத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

அவ்வளவு சிறப்பு மிக்க ஆசிரியர்களின் நிலைமை இப்போது சிறப்பானதாக இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை பெறாமல் தகுதியிழக்கப் போகிறார்கள்.

பகுதி நேர ஆசிரியர்களாகவும், ஒப்பந்த ஆசிரியர்களாகவும், சிறப்பு ஆசிரியர்களாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி நிலைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் தொடுவானமாக நீண்டு கொண்டே செல்கிறது. ஆசிரியர்கள் குறையின்றி இருந்தால் தான் அவர்களால் கற்பிக்கப்படும் இந்த உலகமும் குறையில்லாமல் இருக்கும் என்பதால் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதேபோல், ஆசிரியர்களும் கல்வியில் மட்டுமின்றி அணுகுமுறையிலும், வாழ்க்கை நெறிகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஆசிரியர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x