Published : 04 Sep 2020 08:24 AM
Last Updated : 04 Sep 2020 08:24 AM

மனைவி இறந்தவுடன் கணவருக்கு மாரடைப்பு: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

கோவை

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-1 பகுதியைச் சேர்ந்தவர் மணி(74). இவர், ஓய்வு பெற்ற தனியார் நிறுவன காசாளர். இவரது மனைவி சரோஜினி(72), அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு அம்பிகா என்ற மகள் உள்ளார்.

பக்கவாதம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சரோஜினி கடந்த சில வருடங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சரோஜினிக்கு திடீரென உடல்நிலை மோசமானது. அதே பகுதியில் வசித்துவரும் செவிலியர் வந்து சரோஜினியை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் மணி, யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியே படிக்கட்டு வழியாக இறங்கும்போது, மணி மயக்கமடைந்து கீழே விழுந்தார். சத்தம் கேட்டு வந்த மகள் அம்பிகா மற்றும் குடும்பத்தினர் மணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு மணி உயிரிழந்தது தெரியவந்தது. இறப்பிலும் இணைபிரியாத தம்பதியின் இழப்பு, அக்கம் பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறும்போது,‘‘ தம்பதிக்கு இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டதில்லை. அவர்களின் இறப்பு எங்களுக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்திவிட்டது. இருவரது உடலும் நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x