Published : 04 Sep 2020 07:47 AM
Last Updated : 04 Sep 2020 07:47 AM
காஞ்சிபுரம் பாலாற்றில் உள்ளாவூர் அருகே தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்து பூஜை போட்டுவிட்டு, தற்போது பழையசீவரம் அருகே அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே தடுப்பணை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்என்று கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி ஈசூர்-வள்ளிபுரம் அருகே ரூ.28 கோடியில் ஒரு தடுப்பணையும், கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் பங்களிப்புடன் வாயலூர் அருகே ரூ.32 கோடியில் 2-வது தடுப்பணையையும் தமிழக அரசு அமைத்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டதால் இந்த மாவட்டத்தில் தடுப்பணை இல்லாத நிலை மீண்டும் ஏற்பட்டது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உள்ளாவூர் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.42.16 கோடிநிதியை தமிழக அரசு ஒதுக்கியது. முதல்வர்பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இந்ததடுப்பணைக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்த உள்ளாவூர் பகுதிக்கு பதில் பழையசீவரத்தில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறும்போது, “உள்ளாவூர் பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக உள்ளது. அகலம் அதிகமான பகுதிக்கு நிதி ஒதுக்கிவிட்டு ஆற்றில் அகலம் குறைவாக உள்ள பழையசீவரம் பகுதியில் தற்போது தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை அமைத்தால் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். ஆனால், பழையசீவரம் பகுதியில் அமைப்பதால் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாது. உள்ளாவூர் பகுதியில்மணல் அதிகம் எடுக்கப்பட்டுவிட்டதால் அங்கு அமைக்க சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமாக மணல் திருடியதை தடுக்காமல் விட்டது யார் தவறு? இது தொடர்பாக நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் தூரத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு எந்த இடம் தடுப்பணை அமைக்க சாதகமாக உள்ளது என்று மண் பரிசோதனை செய்யப்படும். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடத்தில்தான் தடுப்பணை அமைக்கப்படும். முதலமைச்சர் பங்கேற்ற தடுப்பணைக்கான பூஜை காணொலிக் காட்சி மூலம்தான் நடைபெற்றது. பொதுமக்கள் எளிதில் வந்து பங்கேற்கும் வகையில் அருகில் உள்ள இடம் பூஜைக்கு தேர்வு செய்யப்பட்டது. மண் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில்தான் தடுப்பணை அமைக்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment