Published : 03 Sep 2020 07:04 PM
Last Updated : 03 Sep 2020 07:04 PM

செமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் மூன்று நாள் - ஏழு நாள் கெடு: இதயமற்ற செயல்; இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும்; ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

செமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் மூன்று நாள், ஏழு நாள் எனக் கெடு விதித்திருப்பது இதயமற்ற செயல் எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 3) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய்த் தொற்று தணியாது பெருகிக் கொண்டிருக்கிறது. பல வகைத் தளர்வுகளோடு ஊரடங்கு செப்.30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பொறியியல் கல்வி பயிலும் (பி.இ/ எம்.இ) மாணவர்கள் மற்றும் எம்.எஸ்சி. மாணவர்கள் செப். 3-ம் தேதிக்குள் (இன்று) செமஸ்டர் கட்டணத்தைச் (ODD SEMESTER) செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டி, செப். 7-ம் தேதிக்குள் அவர்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மனிதநேயமற்றது; கண்டனத்திற்குரியது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள்; குடும்பங்களில் பலர் வேலை இழந்திருக்கிறார்கள்; சிறு, குறு தொழில்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு, மாணவர்களையும் பெற்றோர்களையும் கடுமையான மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது; பலர் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மாணவர்களின் கல்வியையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது.

பேரிடரிலிருந்து மீள வழிவகையின்றி, தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு, கல்விக் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள மூன்று நாள் கெடு, ஏழு நாள் கெடு என்பவை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், ஊரடங்கு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் அவர்களின் சோகமயமான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் இதயமற்ற செயலாகவுமே எண்ணிட வேண்டியிருக்கிறது.

ஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று, செப்.3 வரை விதித்துள்ள கெடுவை, இந்த மாத இறுதி வரை நீட்டித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் பழனிசாமியும் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, மாணவர்கள் நலன் காத்திடத் தாமதமின்றி முன் வர வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும், சம்பந்தப்பட்ட செமஸ்டர்களில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே நான் விடுத்த வேண்டுகோள் குறித்து முதல்வர் இன்னும் மவுனம் காத்துவருவது கவலையளிக்கிறது. அதுகுறித்தும் உடனடியாக முடிவு செய்து, பேரிடர் காலத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த மாணவர்கள் தொடர்பான அறிவிப்பினையும் முதல்வர் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x