Published : 03 Sep 2020 05:28 PM
Last Updated : 03 Sep 2020 05:28 PM
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் நடைமுறை வரும் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (செப்.4) முதல் தொடங்குகிறது.
இது தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலர் சா.ப.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தமிழக அரசின் உத்தரவுபடியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படியும் கடந்த 1-ம் தேதி முதல் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இத்திருக்கோயிலில் 6.9.2020 முதல் ஆன்லைன் மூலம் அனுமதித் சீட்டு பெற்றுக் கொள்ளும் வழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் நாளை (4.9.2020) முதல் ஆன்லைன் அனுமதிச் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் முன்பதிவின்றி வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. தரிசனத்துக்காக வரும்போது ஆன்லைன் அனுமதிசீட்டு மற்றும் முன்பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட ஆதார் ஆட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
திருக்கோயிலில் திருவிழா நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்கள் திருவிழா காண அனுமதி இல்லை. திருவிழா நிகழ்வுகள் நீங்கலாக இடைப்பட்ட தரிசன நேரங்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT