Published : 03 Sep 2020 05:31 PM
Last Updated : 03 Sep 2020 05:31 PM
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ட்ரூனட் முறையிலான கரோனா பரிசோதனைக்காக 2 கருவிகள் வந்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் பரிசோதனை தொடங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 3) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளோர், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவில் தினமும் காலை 8 முதல் 10.30 மணி வரை நேரில் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 04368 - 261242 என்ற 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
கரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காகத் தயார்படுத்தி வைக்குமாறு கூறப்பட்டது. தற்போது வரை 150 படுக்கைகள் தயார் செய்துள்ளனர்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தற்போது ஆன்டிஜன் முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 50 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ட்ரூனட் (TrueNAT) முறையில் பரிசோதனை செய்வதற்காக 2 கருவிகள் வந்துள்ளன. அடுத்த வாரத்திலிருந்து இந்த முறையிலான பரிசோதனைகள் தொடங்கப்படும்.
விநாயாக மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்துவருகிறது. அங்கு புதுச்சேரி அரசின் வழிகாட்டலின்படி கட்டணம் வசூலிக்கப்படும்.
குறுகிய கால அடிப்படையில் மருத்துவர், செவிலியர், கிராமப்புற செவிலியர் உள்ளிட்டோரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு ஆட்சியரகத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாணை வழங்கப்படும். முதல் நாளில் 200 பேர் வரை நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்குரிய இலவச அரிசி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுவிடும்.
பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காலி மனைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வீடுகளிலிருந்து கழிவுநீரைக் காலி மனையில் விடக்கூடாது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால்களைத் தூர் வாருவதற்கு அரசிடம் நிதி அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படும்".
இவ்வாறு ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT