Published : 03 Sep 2020 05:02 PM
Last Updated : 03 Sep 2020 05:02 PM

3 பொதுச் செயலாளர்கள் திமுகவை உருவாக்கியவர்கள்; முதன்முறையாகத் தொண்டன் பொறுப்பேற்கிறேன்: துரைமுருகன் பேட்டி

சென்னை

திமுகவில் இதற்குமுன் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் மூவரும் கட்சியை உருவாக்கியவர்கள். நான் தொண்டனாக இருந்து, கட்சியில் வளர்ந்து, இப்பொறுப்புக்கு வந்துள்ளது பயம் கலந்த மகிழ்ச்சி தருகிறது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் வேட்மனுத் தாக்கலுக்குப் பின் துரைமுருகன் அளித்த பேட்டி:

“வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாபெரும் இயக்கம் திமுக. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவி என்பது மிக உயர்ந்தது மட்டுமல்ல, பொறுப்பு வாய்ந்தது. பல கடமைகளை உள்ளடக்கியது. அண்ணா இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார், நாவலர் நெடுஞ்செழியன் இருந்துள்ளார். எங்கள் பேராசிரியர் இருந்துள்ளார். அடுத்து நான் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக வந்துள்ளேன்.

இதில் ஒரு பெரிய உண்மை என்னவென்றால் அண்ணாவும், நெடுஞ்செழியனும், அன்பழகனும் திமுகவை உருவாக்கியவர்கள். அவர்கள் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்கள். நான் அந்த இயக்கத்தில் தொண்டனாகச் சேர்ந்து அவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒரு அதிர்ச்சியும் இருக்கிறது.

அந்த மாபெரும் தலைவர்கள் ஆற்றிய பணியில் நான் செயல்பட முடியுமா என்கிற பயம் இருக்கிறது. ஆக, பயம் கலந்த மகிழ்ச்சி எனக்கு''.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்தப் பதவியில் செயல்பட சவால் எதுவும் உள்ளதா?

எங்கள் தலைவர் ஸ்டாலின் என்னைப் போலவே இந்த இயக்கத்தில் தொண்டாற்றி, உழைத்து உழைத்து இந்த இயக்கத்தின் தலைவராக வந்துள்ளார். எங்களுக்கு எங்கள் இயக்கத்தில் ஏற்படுகிற எதுவும் சவால்தான். அதை நானும், தலைவரும் இயக்கத்தில் உள்ள முன்னணித் தலைவர்களும் சேர்ந்து பேசி, அந்தச் சவால்களை எதிர்கொள்வோம்.

க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாதபோது பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்கள் தலைவருக்கு வழங்கப்பட்டன. தற்போது அது மீண்டும் கிடைக்குமா?

பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் என்றைக்கும் உள்ளது. அதை மாற்றவில்லை. தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஒரு நிலையில் ஏதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, யார் முடிவைச் சொல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அப்போது தலைவர் தலையிட்டு அவர் சொல்வதுதான் இறுதி முடிவு. ஆகவே, தீர்ப்பு சொல்லும் இடத்தில் தலைவர் இருக்கிறார்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x