Published : 03 Sep 2020 04:25 PM
Last Updated : 03 Sep 2020 04:25 PM
திமுகவில் க.அன்பழகன் மறைவுக்குப் பின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ள நிலையில், அப்பதவிக்கு திமுக மூத்த தலைவர் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
திமுக பொதுச் செயலாளராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த க.அன்பழகன் வயோதிகம் காரணமாக காலமானார். இதனால், பொதுச் செயலாளர் பதவி காலியானது. பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் பொதுச் செயலாளர் பதவியில் போட்டியிட, பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் துரைமுருகன் திமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. இந்நிலையில் கரோனா தாக்கம் காரணமாக திமுக பொதுக்குழு கூடுவது தள்ளிப்போனது. இதனால், மீண்டும் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காணொலி மூலமாக பொதுக் குழுவைக் கூட்ட முடிவு செய்து, பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக பொதுக்குழு கூட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனால் மீண்டும் திமுக விவகாரம் சூடுபிடித்தது. பொதுச் செயலாளராகத் துரைமுருகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியானது. இந்நிலையில் இன்று வேட்பமனுத் தாக்கல் நடைபெறும், நாளை பரிசீலனைக்குப் பின் இறுதிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்மனுத் தாக்கல் செய்தார்.
இதேபோன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அறிவாலயம் வந்த துரைமுருகன், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்பு மனுவையும் முன்வைப்புத் தொகையையும் கட்டி மனுத் தாக்கல் செய்தார். துரைமுருகனைத் தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், அவர் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது.
திமுகவின் நான்காவது பொதுச் செயலாளர்
திமுகவின் நான்காவது பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுகிறார். 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் திமுக தொடங்கப்பட்டது. அப்போது பொதுச் செயலாளர் பதவிக்கு அண்ணா தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவி பெரியாருக்காகக் காலியாக இருப்பதாக அறிவித்தார்.
1955-ம் ஆண்டு நெடுஞ்செழியன் திமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு 1956 கட்சி மாநாட்டில் முறைப்படி அறிவிக்கப்பட்டார். 60-ம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் அண்ணா பொதுச் செயலாளரானார். பின்னர் 64-ல் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் நெடுஞ்செழியன்.
1977-ல் நெடுஞ்செழியன் அதிமுகவுக்குச் சென்ற பின்னர் கட்சியின் பொதுச் செயலாளரானார் க.அன்பழகன். அவர் மறையும்வரை அவரே பொதுச் செயலாளராக இருந்தார். அவருக்குப் பின் தற்போது துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆகிறார்.
மூன்று முக்கிய சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் துரைமுருகன். க.சுப்பு, ரகுமான்கான் மற்ற இருவர். க.சுப்பு பின்னர் திமுகவை விட்டு விலகினார். ரகுமான் கான் சமீபத்தில் மறைந்தார். திமுகவில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து ஆற்காடு வீராசாமியுடன் மூத்த தலைவராக துரைமுருகன் திகழ்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT