Last Updated : 03 Sep, 2020 01:05 PM

 

Published : 03 Sep 2020 01:05 PM
Last Updated : 03 Sep 2020 01:05 PM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

காரைக்கால் பழைய ரயிலடி அருகே விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்.

காரைக்கால்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காரைக்காலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் பழைய ரயிலடி அருகே இன்று (செப். 3) நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க காரைக்கால் மாவட்டத் தலைவர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு எதிரான மின்சாரச் சட்ட மசோதா உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.7,500 தொகை மற்றும் 6 மாதங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி நாளொன்றுக்கு ரூ.600 கூலி வழங்க வேண்டும், ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கி நிரந்தர வேலை வாய்ப்பளிக்க வேண்டும், காரைக்கால் பகுதிக்குரிய 7 டி.எம்.சி காவிரி நீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், கால்நடைகளுக்கு முழு மானியத்துடன் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

விவசாய சங்க, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜி.கே.குமார், ஜி.புண்ணிய மூர்த்தி, சி.தென்றல் சிதம்பரம், டி.சங்கர், கே.மாரிமுத்து, வி.வீரராகவன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். விவசாயத் தொழிலாளர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x