Published : 03 Sep 2020 10:17 AM
Last Updated : 03 Sep 2020 10:17 AM

ஊரடங்கு தளர்வுகள்: பொருளாதார ரீதியாக மக்களை காக்கவே; அனைவரும் பாதுகாப்புடன் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது, பொருளாதார ரீதியாக மக்களை காக்கவே என்பதால், அனைவரும் பாதுகாப்புடன் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப்.3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு தற்போது ஊரடங்கில் இருந்த பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி அளித்தள்ளது வரவேற்கத்தக்கது.

தளர்வுகள் அளித்தால் கரோனா தொற்று குறைந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. வருமானம் இல்லாமல் மக்கள் படும் துன்பத்தில் இருந்து விலகவே தளர்வுகள். அன்றாடம் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணிபுரியவும், தொழில் செய்யவும், வணிகத்தை மேற்கொள்ளவும் தான் தவிர, கேளிக்கைகளில் ஈடுபட இல்லை. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படியும், மருத்துவக் குழு அறிவுறுத்தலின்படியும் நாம் நடந்துகொள்ள வேண்டும். அப்போதான் கரோனா தொற்றில் இருந்து நாம் தப்பிக்கலாம்.

கரோனாவின் பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்றின் தாக்கம் அரசு உயர் பதவியில் இருப்பவர் முதல் சாதாரண பாமரர் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. சமீப காலமாக செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

இந்த சூழ்நிலையில் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி முதல் மத்திய அரசு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மாநில அரசு, அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை திறப்பதற்கு பல்வேறு நிபந்தனையுடன் அனுமதி அளித்து இருக்கிறது. இந்த தளர்வுகள் பொருளாதார ரீதியாக நாடும் நாட்டு மக்களும் மீள்வதற்காகதான்.

இந்த தளர்வுகளை நாம் சுதந்திரமாக எடுத்துக்கொள்ள கூடாது. அவசியமான தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். கரோனாவுக்கு சரியான மருந்து கண்டுபிடிக்காத இந்த நேரத்தில் நோய் தொற்று மென்மேலும் பரவிக்கொண்டு தான் இருக்கிறது. ஆகவே நாம் அனைவரும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.

அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் மருத்துவக் குழுவின் அறிவுரைகளான தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் நோயிலிருந்து நம்மை காப்பதற்காகத்தான் ஆகவே இதில் கவுரவம் பார்க்கக் கூடாது. பாதுகாப்பாக இருப்போம், நோயின்றி வாழ்வோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x