Published : 03 Sep 2020 08:17 AM
Last Updated : 03 Sep 2020 08:17 AM
தமிழகத்தில் நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆண்டுதோறும் செப்டம்பரில் சிறப்பு நிகழ்வாக மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட அவகாசம் வழங்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, இப்பணிகள் நவம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில், 2021 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில், மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்வது, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இரட்டைப் பதிவுகள், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.
தவிர, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கரோனா பரவல் உள்ள நிலையில், மாவட்டங்களில் எங்கு, எப்படி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இடத்தை தேர்வு செய்த பிறகு, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT