Published : 03 Sep 2020 07:57 AM
Last Updated : 03 Sep 2020 07:57 AM
காய்கறிகள், பழங்கள், வாசனைதிரவியங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பேரங்காடிகள் விரைவில் தொடங்கப் பட உள்ளன.
கரோனா காலத்தில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை தோட்டக்கலைத் துறை நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. ‘இ-தோட்டம்’ திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தோட்டக்கலைத் துறை பொருட்களை பெரிய அளவில் விற்பனை செய்ய அதிநவீன பேரங்காடி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் கூறிய தாவது:
விவசாயிகளும், மக்களும் பயன்பெறும் வகையில் தோட்டக்கலைத் துறை ஒரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. அதன்படி, தோட்டக்கலைத் துறைபொருட்களுக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய நேரடி விற்பனை நிலையம் முதல்கட்டமாக சென்னை மாதவரம், செம்மொழிப் பூங்கா, மதுரை, திருச்சி,கோவை, சேலம் ஆகிய 6 இடங்களில் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்தும், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 63 தோட்டங்களில் இருந்தும் பெறப்படும் அனைத்து வகையான நாட்டு காய்கறிகள், ஊட்டி காய்கறிகள், பழங்கள், மலர்கள், மாடித் தோட்டத்துக்கான இடுபொருட்கள், 45 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், மாதவரம், கன்னியாகுமரி, ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலைத் துறை தொழிற்சாலைகளில் தயாராகும் சாக்லேட் வகை, மிளகு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் ஆகியவை இங்கு விற்பனை செய்யப்படும்.
கொய்மலர், கட்ஃபிளவர், மலர்க்கொத்து போன்றவையும் கிடைக்கும். வெளிச் சந்தையில் ரூ.1,000-க்கு விற்கப்படும் மலர்க்கொத்து இங்கு ரூ.400-க்கு கிடைக்கும். மேலும், நொறுக்குத் தீனி,ஜூஸ், சூப் வகை, குளிர்பானம், காபி, டீ, மூலிகை பானம் விற்பனையும் உண்டு.
தனியாருக்கு இணையாக ‘மினி ஷாப்பிங் மால்’ போல அமைக்கப்படும் இந்த அதிநவீன பேரங்காடியில் இருசக்கர, கார்பார்க்கிங் உள்ளிட்ட அனைத்துவசதிகளும் இருக்கும். முதல்கட்டமாக 5 மாநகராட்சிகளில் தொடங்கப்படுகிறது. பிற மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT