Published : 02 Sep 2020 07:33 PM
Last Updated : 02 Sep 2020 07:33 PM
புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப். 2) கூறியதாவது:
"மத்திய மருத்துவக் குழு புதுச்சேரிக்கு வந்து நம்முடைய மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து பல பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அவர்கள் வருவதற்கு முன்பாக பல ஆயத்த வேலைகளை அரசின் சார்பில் செய்துள்ளோம். கிராமப்புற மருத்துவமனைகளில் காய்ச்சல் உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அங்கு பொது நோயாளிகள் வருகிற சமயத்தில் காய்ச்சல் உள்ளவர்களும் சென்றால் அவர்களுக்கும் தொற்று பரவும். எனவே, காய்ச்சல் இருக்கிறதா? சளி இருக்கிறதா? நுரையீல் பிரச்சினை இருக்கிறதா என்று கண்டறிவதற்காக புதுச்சேரி மாநிலத்தில் 12 இடங்களில் ஏற்பாடு செய்வதற்கான வேலையை மருத்துவத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நோயாளிகளைத் தவிர வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் செல்வது மட்டுமல்லாமல், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற பணியாளர்களுக்கு ஆக்ஸிமீட்டர் கொடுக்கப்பட்டு, அவர்கள் அந்தந்தப் பகுதிக்குச் சென்று ஒவ்வொருவருக்கும் சுவாசப் பிரச்சினை இருக்கிறதா? மூச்சுப் பிரச்சினை இருக்கிறதா? எனக் கண்டறிந்து, அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 6 கே.எல். அளவுக்கு ஆக்சிஜன் வைக்கப்பட்டுள்ளது. இப்போது 300-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. அதனை 600 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜிப்மரிலும் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.
தேவையான மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு செய்தாலும் கூட மக்கள் விழிப்புணர்வோடு இருந்து அரசுக்கு ஒத்துழைத்தால்தான் கரோனா தொற்றுப் பரவாமல் தடுத்து நிறுத்த முடியும். மத்திய அரசு எல்லாத் தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பானது, மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் கரோனா தொற்று பரவும் என்று கூறுகிறது. எனவே, நாம் படிப்படியாகத் தளர்வுகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறோம். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கழிப்பறைகள் சுத்தமாக வைக்கவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அந்தக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ததை மக்கள் பார்த்தார்கள்.
மருத்துவக் கல்லூரியில் உள்ள பணியாளர்கள் வேலை செய்யாவிட்டாலும் கூட அங்குள்ள நோயாளிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதாவது, நோயாளிகள் கழிப்பறைக்குச் சென்றால் அவர்களே சுத்தம் செய்துவிட்டுவர வேண்டும். வீட்டில் எப்படி கழிப்பறையைச் சுத்தம் செய்கிறோமோ, அதேபோல் மருத்துவக் கல்லூரியில் உள்ள கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாக உள்ளது. குறை சொல்வது சுலபம். ஆனால், இருக்கிற சூழ்நிலையில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கரோனா தொற்று குறித்து தொலைக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சமுதாய நலவழி மையங்களில் உமிழ்நீர் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவு மட்டுமல்லாமல், மாநில அரசு உத்தரவுப்படி தினமும் 3,000 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படிச் செய்வதன் மூலம் கரோனா தொற்று தாக்கத்தைக் குறைக்க முடியும்.
மாநில வருவாய் கடந்த 2 மாதங்களில் 60 சதவீதமாக ஆகிவிட்டது. நம்முடைய மாநில நிதியை மட்டும் வைத்துத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆகவேதான் கடந்த 27 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் எல்லாம் மத்திய அரசானது மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், நிதி அமைச்சரோ 2 பரிந்துரைகளைக் கூறினார்.
மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி இருக்கும்போது மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதனை ஈடு செய்யும் என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்கள் வெளி மார்க்கெட், ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார். 2020-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை தேவைப்படுகின்ற நிதி ரூ.97 ஆயிரம் கோடி இழப்பீட்டுத் தொகையாகக் குறிப்பிட்டு அந்தப் பணத்தை மாநிலங்கள் பெறுவதற்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் கரோனா தொற்று பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சி என ஒட்டுமொத்த பாதிப்பையும் சேர்த்துப் பார்த்தால் மாநிலங்களின் பாதிப்பு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கோடி. இதில் கொடுக்க வேண்டிய நிதியை ரிசர்வ் வங்கியில் இருந்து பெறுவதற்கும் மத்திய அரசு உத்தரவாதம் கொடுப்பதாகவும், ஆனால், அந்தப் பணத்தை வட்டியோடு 2 ஆண்டுகளுக்குள் மாநில அரசு கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசு எங்களுக்கு என்னென்ன உத்தரவுகளைப் போட்டுள்ளார்களோ, என்னென்ன வாக்குறுதி அளித்திருக்கிறார்களோ, அதேபோல் புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு நிதியில் இருந்து கொடுக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு நிதி ஆதாரம் அதிகமாக இருக்கிறது. மாநிலங்களுக்கு நேரடியாக கடன் வாங்குவதற்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் நிதியில் இருந்து வந்தால் வட்டி குறைவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு வெளி மார்க்கெட்டில் மட்டுமல்ல, தனது பொதுத்துறைகளின் ஷேர்களின் மூலமாகக் கூட நிதியைப் பெற முடியும். பொதுத்துறை நிறுவனங்களுக்குக் கடன் வாங்குவதற்கும், மத்திய அரசு ரிசர்வ் வங்கியில் நேரடியாக கடன் வாங்கவும் உரிமை உண்டு.
ஆகவே, அதனைப் பயன்படுத்தி மாநிலங்களுக்கு நிதியைக் கொடுக்க வேண்டும். மாநிலங்களின் தலையில் அதனைச் சுமத்தக்கூடாது என்று கூறியுள்ளோம். இப்போது அதற்கான கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்புகிறோம். அதற்குப் பிறகு நிதியமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறும். அதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாஜக, காங்கிரஸ், மாற்றுக்கட்சி ஆளும் மாநிலமாக இருந்தாலும் எல்லா மாநிலங்களும் நிதிப் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில்கூட நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தடைப்படுகிறது. இச்சூழ்நிலையில், மத்திய அரசானது ரிசர்வ் வங்கி, வெளி மார்க்கெட்டில் இருந்து கடன் பெற்று மாநிலங்களுக்கு நிதி கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT