Published : 02 Sep 2020 03:45 PM
Last Updated : 02 Sep 2020 03:45 PM

கங்கா - குமரி தேசிய நீர்வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா?- வடமாநில வெள்ளசேதத்திற்கு தீர்வு சொல்லும் மதுரை பொறியாளர்

மதுரை 

இந்தியாவில் தற்போது பிஹார், அசாம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நல்ல மழை பெய்து நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வெள்ளம் ஏராளமான சேதாரத்தை ஏற்படுத்திவிட்டு ஓடுகிறது. சமீபத்தில்தான் தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

தற்போது வடமாநிலங்களிலும் அதுபோன்ற இயற்கைப் பேரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், மக்கள் ஏராளமான உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் அடைந்துள்ளனர்.

கரோனாவால் சேதமடைந்த இந்தியப் பொருளாதாரம், வடமாநிலங்களில் இந்த இயற்கை பேரழிவால் மற்றுமொரு நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கான தீர்வு குறித்து மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினரும், நீர்வழிச்சாலை பொறியாளருமான ஏ.சி.காமராஜ் கூறுகையில், ‘‘இமய மலையில் உற்பத்தியாகி வங்கத்தில் கலக்கும் கங்கை, பிரம்மபுத்திரா போன்ற ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தை கால்வாய்கள் அமைத்து தெற்கே குமரி வரை கொண்டு வருவதோடு இடையில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதோ அது போல காஷ்மீர் முதல் குமரி வரை அனைத்து நதிகளையும் பிணைத்து உருவாகவிருக்கும் நீளமான கால்வாய் நீர்த்தேக்கமே இந்த கங்கா - குமரி தேசிய நீர்வழிச் சாலை அல்லது நவீன நீர்வழிச் சாலைத் திட்டம்.

இது சுதந்திரம் அடையும் முன்பிருந்தே சொல்லப்பட்டுவரும் பல்வேறு நதிகள் இணைப்பு திட்டங்களை விட மேலானது. தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் கொடுத்துள்ள 30 நதிகள் இணைப்புக்களுக்கு சிறந்த மாற்று “கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டம்” என மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும்.

நவீன நீர்வழிச்சாலையானது கடல் மட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சமமட்ட உயரத்தில் அமைவதால் நீர் பரிமாற்றம் வடக்கோஇ தெற்கோ, கிழக்கோ, மேற்கோ எந்த திசையிலும் இருக்கும்.

இது மின்சார பிணைப்பு போல நீர்ப் பிணைப்பை உருவாக்குகிறது. இது எந்தவொரு பிராந்தியத்திலிருந்தும் வேறு எந்த பிராந்தியத்திற்கும் நீர் செல்ல உதவுகிறது. இதன் விளைவாக இந்த திட்டத்தில் நீர் விநியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கவும் மற்றும் எடுத்துக்கொள்ளவும் கொள்கை உறுதி செய்யப்படுகிறது.

வெள்ள நீரை மட்டும் எடுத்து தேவையான பகுதிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்குவதால் இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்கிறது.

நவீன நீர்வழிச்சாலை மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. அனைவருக்கும் தங்கு தடையற்ற குடிநீர், 150 மில்லியன் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம், 180 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு, 15000 கி.மீ நீளத்திற்கு நீர்தேக்கம், 15000 கி.மீ நீர்வழிச்சாலை மற்றும் நெடுஞ்சாலை 60000 மெகாவாட் நீர்மின்சாரம், நிலத்தடி நீர் உயர்வால் 40000 மெகாவாட் மின்சாரம் மீதம், ஆண்டுக்கு ரூ. 250000 கோடி எண்ணெய் இறக்குமதி செய்வதில் மிச்சம், மீன் உற்பத்தி அதிகரிப்பு, சுற்றுலா மேம்பாடு என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

நமது நாட்டில் உள்ள இயற்கை வளங்களில் முக்கிய வளமான நீரை இத்திட்டத்தின் மூலம் முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை நீக்கி நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மகத்தான பலன்களைப் பெறுவதோட விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கலாம். இத்திட்டத்தினை பீஹார், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை கொடுத்துள்ளது. பீஹார் மாநிலம் தங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்ததோடு மத்திய திட்டக்குழுவுக்கும் நிதி வழங்கும்படி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இந்த திட்டத்தினை விரைந்து செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் அரசு ஆண்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் ரூ. 5 லட்சம் கோடி இழக்கிறது. இந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் இவை அனைத்தும் மாறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x