Published : 02 Sep 2020 02:39 PM
Last Updated : 02 Sep 2020 02:39 PM

அரைகுறையாய்க் கட்டிய கால்வாயில் அரித்துக் கொண்டு ஓடிய தண்ணீர்: கொந்தளிப்பில் பெரியாறு கால்வாய் விவசாயிகள்

மதுரை

தமிழகத்தின் முதல் நதி நீர் இணைப்புத் திட்டம் என்று பெரியாறு அணையைச் சொல்லலாம். முல்லைப் பெரியாறு தண்ணீரை வைகைக்குத் திருப்பி, அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்குப் பாசன வசதி தரும் இந்தத் திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், பிரதானக் கால்வாயைத் தவிர, பிரிவு கால்வாய்கள் எல்லாம் மண்ணில் வெட்டிய வெட்டாறாகவே இருந்துள்ளது. இந்தக் கால்வாய்களை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள், சிமெண்ட் சிலாப் பதித்து, கான்கிரீட் போட்டு பலப்படுத்தி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள அ.புதூர் கிராமத்தில் இருந்து தாமரைப்பட்டி வரையில், பெரியாறு பாசனக் கால்வாயைக் கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் இந்தக் கால்வாய் அமைக்கப்படும் என்று கூறி, ஏற்கெனவே அந்தக் கால்வாயில் பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகளை ஜேசிபி மூலம் அகற்றினார்கள் கான்டிராக்டர்கள். வழக்கமாக இந்தக் கால்வாயில் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் கால்வாய் பணி தொடங்கியதால், திட்டமிட்ட காலத்திற்குள் வேகமாகப் பணிகளை முடிக்க முடியுமா என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

அவர்கள் பயந்தது போலவே, அ.புதூர் முதல் யா.கொடிக்குளம் வரையில் மட்டுமே கால்வாய் அமைக்கப்பட்டிருந்த நேரத்தில், வைகை அணையில் இருந்து இந்தக் கால்வாயில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பித்தார். அதன்படி கடந்த 31-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்துவிட்டார். இந்தத் தண்ணீர் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலையிலேயே இந்தப் புதிய கால்வாயில் பாயத் தொடங்கியது. இதனை எதிர்பார்த்து முந்தைய நாளுடன் வேலையை முடித்துக்கொண்டு வெளியேறினார்கள் கான்டிராக்டர்கள். இதனால் பணிகள் முடியாமலேயே கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. சில இடங்களில் பணி முடியாததாலும், சிமெண்ட் காயாததாலும் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.புதூரைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் கூறியதாவது, "இந்தக் கால்வாயை யார் கட்டுகிறார்கள், எதற்காகக் கட்டுகிறார்கள் என்று பாசன விவசாயிகளான எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. அரசுப் பணி எது நடந்தாலும், அங்கே திட்ட விவரம் குறித்த அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், இந்தக் கால்வாய் எந்தத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகிறது, கட்டுமானப் பணி எதிலிருந்து எதுவரையில், மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு, பணி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால விவரம் என்று எந்த விவரமும் அறிவிப்புப் பலகையாக வைக்கப்படவில்லை.

நன்றாக இருந்த கால்வாயை அவசர அவசரமாகத் தோண்டி, அவசர அவசரமாகக் கட்டி, அரைகுறையாக முடிந்த நிலையில் தண்ணீரை விட்டுவிட்டார்கள். திட்டத் தொடக்க விழாவும் நடக்கவில்லை, திறப்பு விழாவும் நடக்கவில்லை. என்ன நடக்கிறது என்று உள்ளூர்க்காரர்களுக்கே விளங்கவில்லை. இதுகுறித்து முறையான தகவலை ஊர் மக்களுக்குத் தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதுகுறித்து வைகை பெரியாறு பாசனத் திட்ட மதுரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, "பொறியாளர் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். அவர் எப்போது வருவார் என்று தெரியாது. அவரது தொடர்பு எண்ணும் எங்களிடம் இல்லை" என்றார் அங்கிருந்த ஊழியர்.

ஏற்கெனவே, மதுரை மாவட்டத்தில், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நிறைய கண்மாய்கள் அரைகுறையாகத் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், அரைகுறையாய் முடிக்கப்பட்ட இந்தக் கால்வாய்ப் பணியும் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x