Published : 02 Sep 2020 02:14 PM
Last Updated : 02 Sep 2020 02:14 PM

செப்.7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் தளர்வாக மாநிலம் முழுவதும் மாவட்டங்கிளுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் செப்.7 முதல் அனுமதி அளிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு, கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொதுப் பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கியப் பணி மற்றும் வியாபார நிமித்தமாகச் சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி (Standard Operating Procedure), செப்டம்பர் 7 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி (Standard Operating Procedure), தற்போது செப்டம்பர் 7 முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்திக் கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்றுப் பரவாமல் தடுக்க முடியும்.

எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x