Published : 02 Sep 2020 02:10 PM
Last Updated : 02 Sep 2020 02:10 PM
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் பொருளாதார அறிஞர்கள் இந்த ஆட்சியிலிருந்து விலகிச் சென்றதே. இந்த ஆட்சி யாரையும் மதிக்காததே வீழ்ச்சிக்குக் காரணம் என்று திமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:
“திமுகவின் 9-வது பொதுக்குழு கூட உள்ளது. பொதுக்குழுவை எப்படிக் கூட்டுவது, எப்படி முறைப்படுத்தி நடத்துவது என்பதை விளக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. நாளை மனுத்தாக்கல் நடக்கிறது, நாளை மறுநாள் யார் போட்டியில் உள்ளார்கள் என்பது தெரியும்.
ஒருமித்த கருத்தா, போட்டியா என நாளை தெரியும். ஊடகங்களே பல பெயர்களைப் போட்டு இவர் பெயர் அடிபடுகிறது, அவர் பெயர் அடிபடுகிறது என்று கேட்கின்றன. அடிபட்டவர்களை சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு விண்ணப்பித்தவர்களைத் தேர்வு செய்வோம். நாளைதான் விண்ணப்பமே பெறப்படுகிறது. நாளைதான் தெரியும்.
மத்திய அரசின் பொருளாதாரச் சரிவு குறித்துக் கேட்கிறீர்கள். 2014-ல் தொடங்கிய பொருளாதாரச் சரிவு கடந்த 6 ஆண்டுகளாக சரிந்தே வருகிறது. காரணம் பொருளாதாரம் அறிந்தவர்கள், தகுதியானவர்கள் அதற்குரிய பொறுப்பில் இல்லாததுதான்.
இந்த ஆட்சியிலிருந்து பொருளாதார அறிஞர்கள் விலகி விட்டார்கள். இவர்கள் யார் சொல்வதையும் கேட்பதில்லை. 2 ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் விலகியதும் இவர்கள் ஆட்சியில்தான் நடந்தது. நிதி ஆயோக்கிலிருந்து ஒருவர் ராஜினாமா செய்ததும் பாஜக ஆட்சியில்தான். பாஜக ஆட்சியில் பொருளாதார நிபுணர்களின் பேச்சைக் கேட்காததுதான் இந்த அளவுக்குப் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம்.
அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றத் தயாராக இல்லை. தலைக்கு ரூ.15 லட்சம் என்ற வாக்குறுதி தொடங்கி இன்று சமையல் சிலிண்டருக்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது வரை இந்த அரசாங்கம் தோற்றுவிட்டது.
மாநிலங்களுக்கு மார்ச் 31 வரை வசூலான வரி வருவாயைத் தரவேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி வரி வருவாய் இல்லை என்கிறார்கள். இந்த ஆண்டுதான் கரோனா, கடந்த ஆண்டு கரோனா கிடையாது. அந்த வருமானத்தை என்ன செய்தீர்கள்? அதை அளிக்கவேண்டும்.
பி.எம்.கேர்ஸ் என்ற ஒன்றைக் கரோனா காலத்தில் ஆரம்பித்தார்கள். டாடா உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் எல்லாம் பணத்தைக் கொட்டிக்கொடுத்தார்கள். ஏராளமாக நிதி குவிந்த பி.எம்.கேர்ஸ் கணக்குப் பற்றிக் கூறமாட்டார்கள், அதைக் கரோனா நிவாரணமாகப் பிரித்தும் கொடுக்க மாட்டார்களாம். இந்த ஆட்சி மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகிறதே தவிர, மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
திமுகவில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் பொருளாளர், பொதுச் செயலாளர் அவர்களுக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்”.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT