Published : 02 Sep 2020 01:54 PM
Last Updated : 02 Sep 2020 01:54 PM

சாடியாற்றில் குளிக்க வரும் சுற்றுலாப் பிரியர்கள்; கரோனா அச்சத்தில் சாடிவயல் கிராமவாசிகள்!

கரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல முடியாத சுற்றுலாப் பயணிகள், இப்போதெல்லாம் இதன் அடிவாரப் பகுதியில் ஓடும் சாடியாற்றில் குளியல் போடுவது வழக்கமாக மாறியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்த முழுப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் இங்கே கூட்டம் குவியலாம்; அதன் காரணமாகத் தொற்று அதிகரிக்கலாம் எனும் அச்சம் இப்பகுதி மக்களுக்கு எழுந்திருக்கிறது.

கோவை மக்கள் எளிதில் சென்றுவரும் தொலைவில் இருக்கும் குளிர்ச்சிமிக்க சுற்றுலாத் தலம் கோவை குற்றாலம். கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவிக்கு விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவது வழக்கம். திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, கேரளத்திலிருந்தும்கூட இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவது உண்டு. கோவை குற்றாலத்தை உருவாக்கும் நீரோடை, தொடர்ந்து காடுகளுக்குள் 4 கிலோ மீட்டர் தூரம் சீங்கம்பதி, சாடியாத்தாபாறை ஓடைகளில் பெருக்கெடுத்து, சாடிவயலில் சாடியாறாக வந்து சேருகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த ஆற்றிலும் குளிப்பதுண்டு.

அருவிக்குச் செல்பவர்களைச் சாடிவயல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனையிட்ட பிறகே வனத் துறையினர் அனுமதி வழங்குவார்கள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சோதனைச் சாவடிக்கு அரை கிலோ மீட்டர் முன்னதாகவே வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். அங்கிருந்து வனத்துறை வாகனங்களில்தான் அருவிக்குச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், மது பாட்டில்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி, சோப்பு என்பன போன்ற பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.

கரோனாவால், எப்போதும் பரபரப்பாய்க் காணப்படும் கோவை குற்றாலத்தின் 4 கிலோ மீட்டர் காட்டுப்பாதையும் தற்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. பாதையெங்கும் இலை, தழைகள் குப்பைக்காடாகத் தேங்கியிருக்கின்றன. சோதனைச் சாவடிக்கு வெளியே இருக்கும் டீ, டிபன் கடைகள் எல்லாம் பெரும்பாலும் பூட்டியே காணப்படுகின்றன. சோதனைச் சாவடியில் இரவு, பகல் என இரண்டு வனவர்கள், உதவியாளர்களுடன் காவலுக்கு உள்ளனர். தவிர இங்கிருந்து சற்றே தள்ளி இருக்கும் கும்கி முகாமில், இரண்டு வளர்ப்பு யானைகள் பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மற்றபடி இங்கே மனித நடமாட்டம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

ஆனால், இங்கிருந்து சற்று கீழே 50 மீட்டர் தூரத்தில் சாடியாற்றில் குளிக்க வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், கரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சாடிவயலைச் சேர்ந்த தங்கவேலு என்ற விவசாயி நம்மிடம் பேசுகையில், “ஒரு மணி நேரம் முன்னாடிதான் இங்கே சுமார் நூறு பேர் குளிச்சிட்டு இருந்தாங்க. போலீஸ்காரங்க வந்து சத்தம் போட்டு எல்லோரையும் விரட்டிவிட்டாங்க. ஆனா, போலீஸ்காரங்க போனதும் திரும்பவும் கூட்டம் வந்துடுது. கோவை குற்றாலத்தைப் பார்க்கணும்னு வர்றவங்கதான், அதுக்கு அனுமதி இல்லாததால சாடியாற்றில் குளிக்கிறாங்க. அதுல நிறையப் பேர் வனத்துக்குள்ளேயும் போயிடறாங்க. சனிக்கிழமைகள்ல இது ரொம்பவும் அதிகமாயிடுது.

இதுவரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முடக்கமா இருந்ததால அந்த நாள் மட்டும் இங்கே யாரும் வர்றதில்லை. இப்ப அதுவும் இல்லைன்னு ஆயிட்டதால இனிமே ஞாயிற்றுக்கிழமையிலும் கூட்டம் அதிகமாயிடும். யாரு எந்த ஊர்லருந்து வர்றாங்க. யாருக்குத் தொற்று இருக்குன்னு யாருக்குத் தெரியும்? அதனால இங்கே நிரந்தரமா ஒரு போலீஸ் செக்போஸ்ட் போட்டு இவங்களை எல்லாம் வர விடாம பண்ணணும். அப்படியே வந்தாலும் இப்படி ஒரே இடத்துல குளிக்க அனுமதிக்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x