Published : 02 Sep 2020 01:48 PM
Last Updated : 02 Sep 2020 01:48 PM
திமுகவில் காலியாக உள்ள பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்கியது. நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது. பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றி டி.ஆர்.பாலு தேர்வாக உள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. மேலும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5-ம் தேதி மாலை வரை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச் செயலாளராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த க.அன்பழகன் வயோதிகம் காரணமாக காலமானார். இதனால், பொதுச் செயலாளர் பதவி காலியானது. பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் பொதுச் செயலாளர் பதவியில் போட்டியிட வாய்ப்பாக அவர் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் துரைமுருகன் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. இந்நிலையில் கரோனா தாக்கம் காரணமாக பொதுக்குழு கூடுவது தள்ளிப்போனது. இதனால், மீண்டும் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காணொலி மூலமாக பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து, பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக பொதுக்குழு கூட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இதனால் மீண்டும் திமுக விவகாரம் சூடுபிடித்தது. பொதுச் செயலாளர் துரைமுருகன் மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியான நிலையில், பொருளாளர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி என பலரின் பெயர்கள் கூறப்பட்டன.
கே.என்.நேரு மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமை நிலையச் செயலாளராக்கப்பட்டார், அந்தப் பொறுப்பிலிருந்த டி.ஆர்.பாலு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் என்கிற பொறுப்போடு உள்ளார். ஆ.ராசாவும் போட்டியில் உள்ளார். இவர்களில் யார் பொருளாளராக வருவார் என்பதில் திமுக தலைமையின் முடிவைப் பொறுத்து அவர்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும்.
போட்டியாக தேர்வை நடத்தக்கூடாது என்பதில் திமுக தலைமை உள்ளதால் பொருளாளர் பதவிக்கும் போட்டி இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைமையும் பொருளாளர் பதவியும் பொதுச் செயலாளர் பதவிபோல் போட்டியின்றித் தேர்வு செய்யப்படவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளதால் போட்டியிருக்காது என்று தெரிகிறது. டி.ஆர்.பாலுவை பொருளாளராகத் தேர்வு செய்வதில் பிரச்சினை இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று வேட்புமனுக்கள் விண்ணப்பம் தொடங்கியதிலிருந்து எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட 4 பேர் வாங்கிச் சென்றுள்ளனர்.
மற்றொருபுறம் எ.வ.வேலு சமீபகாலமாக தலைமையுடன் மனத்தாங்கலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவர் போட்டியிலேயே இல்லை என்கிறது திமுக வட்டாரம்.
இதனால் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பொதுக்குழுவில் வரும். அதே நேரம் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் பதவியிலிருந்து டி.ஆர்.பாலு விடுவிக்கப்பட்டு கனிமொழிக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment