Published : 02 Sep 2020 12:14 PM
Last Updated : 02 Sep 2020 12:14 PM
கரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி வசூலித்த ரூ.8 லட்சம் முன்பணத்தை திருப்பித் தரக் கோரி மதுரை தனியார் மருத்துவமனை மீது தொடரப்பட்ட வழக்கில் சுகாதாரத் துறை பதில்தர உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ராஜாமில் பகுதியைச் சேர்ந்த நேரு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நானும் எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரை வைத்தியநாதபுரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் ராஜ்குமார் என்பவரிடம் சிகிச்சைக்காக சென்றோம்.
கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி சிகிச்சைக்காக சென்ற நிலையில், இருவருக்கும் கரோனா நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால், அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முன்பணமாக 8 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
கொரோனா நோய்த்தொற்றின் மீதான அச்சம் காரணமாக 5 லட்ச ரூபாயை பணமாகவும் 3 லட்ச ரூபாயை கிரெடிட் கார்ட் மூலமாகவும் செலுத்தினோம்.
இந்நிலையில் காரோனோ பரிசோதனை முடிவில் கரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின்னர் ஜூலை 10 -ம் தேதி இருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டோம்.
அப்போது முன்பணமாக செலுத்திய தொகையில் சிகிச்சைக்கான கட்டணத்தை தவிர்த்து மீதமுள்ள தொகையை கொடுக்குமாறு கேட்டோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது.
சிகிச்சை கட்டணத்திற்கான ரசீது கேட்டபோது 65 ஆயிரத்து 840 ரூபாய்க்கு மட்டும் இருவரது பெயரிலும் ரசீது வழங்கினர்.
முன்பணமாக செலுத்திய தொகையை வழங்கக்கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை மருத்துவமனை நிர்வாகம், பணத்தைத் திரும்ப வழங்கவில்லை.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கரோனா நோய்த்தொற்று மீதான மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் பல கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன.
மதுரை வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு முன்பணமாக செலுத்திய தொகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT