Published : 02 Sep 2020 11:58 AM
Last Updated : 02 Sep 2020 11:58 AM

கரோனா பாதித்தோருடன் தொடர்பில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை கட்டாயம்: கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை

கரோனா பாதித்தோருடன் தொடர்பில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை கட்டாயம் என்று கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கரோனா வைரஸ் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

* கோவை மாநகராட்சிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வழிவகை செய்திட தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிட சிரமம் உள்ளவர்கள் உடனடியாக கரோனா மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள பறக்கும் படையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.

* கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் பணிபுரிந்த பகுதியில் உள்ள நபர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.

* அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் சிறப்பு மருத்துவ முகாமிற்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்திடத் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையினையும், மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையினையும் அதிகப்படுத்த வேண்டும்.

* கரோனா பாதிக்கப்பட்டவரின் வீட்டில் வசிக்கும் நபர்கள், கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.

* சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனைகளை மொபைல் வாகன குழு மூலம் அதிக எண்ணிக்கையில் எடுத்திட சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்துப் பணியாளர்களும் கரோனா தொற்றுப் பரவுதலைத் தடுப்பதற்காக ஒருங்கிணைந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x