Published : 02 Sep 2020 08:17 AM
Last Updated : 02 Sep 2020 08:17 AM

ராகு, கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சியின்போது, உற்சவர் ராகு பகவானுக்கு நேற்று நடைபெற்ற தீபாராதனை

கும்பகோணம்/ மயிலாடுதுறை

ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலமான நாகநாத சுவாமி கோயிலில் நேற்றுராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இங்கு அருள்பாலிக்கிறார். நேற்று மதியம் 2.16 மணிக்கு ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு சிறப்பு யாகம், ராகு பகவானுக்கு மஞ்சள், இளநீர், தேன், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பரிகார பூஜைக்காக பணம் செலுத்தி பெயர் முன்பதிவு செய்துகொண்ட மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த பக்தர்கள், குறைந்த எண்ணிக்கையிலான உபயதாரர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோயிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று மதியம் 2.16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு கேது பெயர்ச்சி ஆனபோது சிறப்பு யாகம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

திருப்பாம்புரம் கோயிலில்...

இதேபோல, திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் உள்ள ராகு- கேதுவுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள், கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்துகொண்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x