Published : 01 Sep 2020 08:33 PM
Last Updated : 01 Sep 2020 08:33 PM
ஊரகப் பகுதி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் மருத்துவச் சேவையாற்றுகின்ற நமது அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த உள் ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டம் மூலம், உரிமையை நிலைநிறுத்தியது என முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
“முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில், மாநிலத்திற்கான 50 விழுக்காடு இடங்களில் உள் ஒதுக்கீடாக 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை பல காலமாக தமிழ்நாட்டில் இருந்து வந்தது.
இந்த நடைமுறையைப் பாதிக்கும் விதத்தில், இந்திய மருத்துவக் குழுமம் (மெடிக்கல் கவுன்சில்), முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்கு முறைகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கினை ஆதரித்து மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உள் ஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டும் என்று ஆணித்தரமாக வாதாடியது.
இவ்வழக்கில், நேற்று (31.8.2020) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையில், "மாநில அரசுகள் மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது, முதுநிலை மருத்துவக் கல்வி ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது அல்ல என்றும், எனவே அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசுகள் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கலாம்" என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
ஊரகப் பகுதி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் மருத்துவச் சேவையாற்றுகின்ற நமது அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த உள் ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம், உரிமையை நிலைநிறுத்தியது தமிழக அரசுதான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT