Published : 01 Sep 2020 07:05 PM
Last Updated : 01 Sep 2020 07:05 PM

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்த இருளர் பழங்குடிகள்: கரோனா காலத்தில் விடிவுகண்ட கிராமம்

கோவை

கரோனா காலத்தில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் துயரக் கதைகள்தான் அதிகம் தென்படுகின்றன. கொஞ்சம் விதிவிலக்காகக் கோவை அருகில் உள்ள கல்கொத்திப்பதி பழங்குடி கிராமத்தில் புதிய மலர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

பல ஆண்டுகளாகக் குட்டிச் சுவராய்க் கிடந்த வீடுகள் எல்லாம் இப்போது பசுமை வீடுகளாய் மாற்றப்பட்டு ஜொலிக்கின்றன. ‘இது இன்னைக்கு நேத்திக்குக் கண்ட கனவு இல்லீங்க. 25 வருஷக் கனவு’ என நெகிழ்கிறார்கள் இங்கு வசிக்கும் இருளர் பழங்குடிகள்.

கோவை - சிறுவாணி சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நண்டங்கரை தடுப்பணையை ஒட்டியிருக்கிறது கல்கொத்திப்பதி பழங்குடி கிராமம். இருளர்கள் வசிக்கும் இந்த இடம் அசலான கல்கொத்திப்பதி அல்ல. இங்கிருந்து தொடங்கும் மலைக்காடுகளில் 7 கிலோ மீட்டர் மலை உச்சிக்குச் சென்றால் குகைப் பாறைகளாய்த் தென்படும் இடம் வரும். அதுதான் கல்கொத்திப்பதி.

அங்கே பூர்வகுடிகளாய் வசித்துவந்த இருளர் பழங்குடிகள் காட்டில் தேன், நெல்லி, குங்குலியம், மிளகு உள்ளிட்ட வனப்பொருட்களை எடுத்துவந்தனர். இதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இம்மக்கள் பிழைப்புத் தேடி சாடிவயல், இருட்டுப்பள்ளம், தடாகம் என சமதளப் பகுதிகளுக்கு வர ஆரம்பித்தனர்.

அங்கே விவசாய, கட்டிட, செங்கல் சூளைக் கூலிகளாகப் பணியாற்றி, கிடைத்த பணத்தில் தங்களுக்குத் தேவையான பொருட்களை நகரப் பகுதிகளில் வாங்கிக்கொண்டு மலைக் குடியிருப்புகளுக்குச் செல்வார்கள். இவர்கள் செல்லும் பாதை காட்டு யானை, கரடி, செந்நாய், சிறுத்தை, புலி என வன விலங்குகள் நடமாடும் பகுதி. எனவே, இரவு கீழேயே தங்கிவிட்டு அடுத்த நாள்தான் மலையில் ஏறுவார்கள் இந்த மக்கள். இதற்காகக் கீழேயே சில குடிசைகள் போட்டுத் தங்க ஆரம்பித்தனர்.

இவர்கள் இப்படி இங்கும் அங்குமாகத் திரிவதைக் கவனித்த வனத் துறையினர், மலைக் குடியிருப்பைக் காலி செய்து கீழே வந்தால் வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தனர். அதை நம்பி இவர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் மேலும் சில குடிசைகள் போட்டுக் குடியேறினர். இந்தப் பகுதிக்கும் கல்கொத்திப்பதி என்றே பெயர் சூட்டினர். ஆனால், வாக்குத் தந்தபடி வனத் துறையினர் வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த இம்மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 15 ஆண்டுகளுக்கு முன்பு 27 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. மொத்தம் 30 குடும்பங்களாக, 100 பேருக்கு மேல் இந்த வீடுகளில் வசித்துவந்தனர். இந்த வீடுகளும் சில வருடங்களில் விரிசல் கண்டன. எந்த நேரமும் இடிந்து விழலாம் எனும் அளவுக்குச் சேதமடைந்தன. இந்தக் கிராமத்திற்குப் பிரதானப் பகுதியாக விளங்கும் சிறுவாணி சாலைக்குச் செல்லவும் சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் இங்குள்ள பாதை சேறும் சகதியுமாகக் கிடக்கும். இந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் என்று இம்மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர்.

இறுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு கான்கிரீட் சாலை அமைத்துத் தந்தது பஞ்சாயத்து நிர்வாகம். இடியும் நிலையில் இருந்த வீடுகளுக்குக் கழிப்பிடம் கட்டிக்கொடுப்பதாக ஒரு குழு முன்வந்தது. ஆனால், அந்தப் பணிகளை அவர்கள் பாதியில் விட்டுச்சென்றுவிட, பரிதவிப்பில் ஆழ்ந்தனர் மக்கள். இந்தச் செய்திகள் 4 ஆண்டுகளுக்கு முன்னரே 'இந்து தமிழ் திசை'யில் வெளிவந்திருக்கின்றன.

பழைய வீடுகள் | கோப்புப் படம்

இத்தனைத் துயரக் கதைகளைக் கொண்ட கல்கொத்திப்பதிக்குத்தான் தற்போது விடிவு வந்துள்ளது. ஓரிரு வீடுகளைத் தவிர பெரும்பான்மையான வீடுகள் புனரமைக்கப்பட்டுப் பசுமை வீடுகளாக மாற்றம் கொண்டுள்ளன. ஒரு வீட்டுக்கு ரூ.1.90 லட்சம், சோலார் மின்சாரத்திற்கு ரூ.30 ஆயிரம் என அரசு வழங்கியிருக்கிறது. எஞ்சிய செலவுகளுக்குத் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களிடம் ஸ்பான்சர் பெற்று இந்தக் கரோனா காலத்திலும் வேலையை துரிதப்படுத்தி கட்டிடங்களைக் கட்டி முடித்திருக்கிறார்கள்.

புதுப்பொலிவுடன் காணப்படும் வீடுகள் மத்தியில் உலவும் கல்கொத்திப்பதி மக்களின் முகங்களிலும் புது வெளிச்சம். நான் சென்ற சமயம் 24 வீடுகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு இம்மக்கள் வழிபடும் சிறுதெய்வத்திற்கு கட்டிடப் பணியாளர்கள் நான்கு பக்கச் சுவர் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

கட்டிட வேலை செய்துகொண்டிருந்த பாப்பாளும் இதே பகுதியைச் சேர்ந்தவர்தான். “இந்த வீடுகளுக்கு ஒரு பைசா நாங்க செலவு செய்யலை. கான்ட்ராக்ட்காரங்களே எல்லாம் பார்த்துகிட்டாங்க. 100 நாள் வேலைத் திட்டத்துல எங்களை இதே வேலைக்கும் எடுத்துட்டாங்க. அதனால இங்கிருக்கிறவங்க எல்லோருக்கும் இதுவரை சம்பளமும் கிடைச்சிருச்சு. இப்ப வீடெல்லாம் கட்டி முடிச்சாச்சு. சின்னச் சின்ன வேலைகள்தான் மிச்சமிருக்கு. அதைத்தான் செஞ்சுட்டு இருக்கோம்” என்றார்.

கட்டிட வேலை செய்துகொண்டிருந்த ஒப்பந்ததாரரிடம் பேசியபோது, “இது அமைச்சர் வேலுமணியின் தொகுதி. இந்த மக்களுக்கு எந்தச் செலவும் வைக்காமல் எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கோணும்னு தன்னோட உதவியாளர்களுக்கு அவர் உத்தரவு போட்டிருக்காரு. இந்த வீடுகளுக்கு அரசாங்க ஒதுக்கீடு ரூ. 2.20 லட்சம்தான். ஆனா, ஒரு வீட்டுக்குச் செலவு ரூ. 4 லட்சத்திற்கும் மேலாயிருக்கும். அது எல்லாம் ஸ்பான்சர் மூலமாவே கிடைச்சிருச்சு” என்று தெரிவித்தார்.

கல்கொத்திப்பதி மலையிலிருந்து இந்தப் பகுதிக்கு இவர்கள் வரும்போது ஒருவருக்குக்கூட கல்வியறிவில்லையாம். இப்போது சந்தியா என்ற பெண் பிஎஸ்சி இரண்டாமாண்டு படிக்கிறார். அருகமைப் பள்ளியில் 3 சிறுவர்கள், 4 சிறுமிகள் 6 - 9-ம் வகுப்பு படிக்கிறார்கள். “இங்கே வந்ததுதனாலதான் இத்தனையும் எங்களுக்குக் கிடைச்சுது. இல்லைன்னா இன்னமும் அந்த மலைக்காட்டுக்குள்ளே யானை, சிறுத்தைக்குப் பயந்து பயந்து வாழ்ந்துட்டிருப்போம்” என்கிறார் கல்கொத்திப்பதி கிராமத்தைச் சேர்ந்த மணி.

புலிகள் காப்பகம் என்ற பெயரில் பல்வேறு மலைக் கிராமங்களிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்ற வனத்துறை முயற்சி செய்துவருகிறது. பழங்குடிகளோ எங்கள் பூர்விக மண்ணில்தான் இருப்போம் என்று இயற்கையோடு இயைந்து வாழப் போராடி வருகிறார்கள். அதிலிருந்து சற்று வேறுபட்டதாக இருக்கிறது கல்கொத்திப்பதி மக்களுடைய வாழ்க்கை. ஆனால், ஓரளவுக்கு நல்ல நிலைமையை அடையத்தான் இவர்கள் எத்தனை போராட்டங்களைக் கடந்துவர வேண்டியிருக்கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x