Published : 01 Sep 2020 06:13 PM
Last Updated : 01 Sep 2020 06:13 PM
தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அந்த இயக்கத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். நெய்வேலி அனல் மின் நிலையம், திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற நடுவண் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலியவற்றில் இந்திய அரசு திட்டமிட்டு, தமிழர்களைப் புறக்கணித்து வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது. சொந்தத் தாயகத்திலேயே வேலைக்குத் தகுதியுள்ள தமிழர்கள் அகதிகள் போல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வடநாட்டுத் தேர்வு மையங்களில் நடக்கின்றன. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, தமிழ்நாடு அஞ்சல் துறை முதலியவற்றில் அவ்வாறான ஊழல் வழிகளில் தேர்வெழுதி தமிழ்நாட்டில் வேலையில் சேர்ந்த வடநாட்டினர் அவ்வப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; வழக்குகள் நடக்கின்றன.
தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2017-ல் நடத்திய தேர்வில், வடநாட்டினர் கலந்து கொண்டு தேர்வெழுதி மோசடியாக அதிகம் பேர் வெற்றி பெற்றனர். அந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்யப் பட்டனர். அந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ஊழல் பின்னணியில்தான், 2019-ல் தமிழ்நாடு ரயில்வே துறையில் பழகுநர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கு 95 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்களாக இருந்தார்கள். அதை எதிர்த்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் 2019 மே 3-ம் நாள் பொன்மலை ரயில்வே தொழிற்சாலை வாயிலில் மறியல் போராட்டம் நடத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த அநீதியை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பின.
இதன் விளைவாக, பழகுநர் பயிற்சிக்கான பணி சேர்ப்புக்கு தென்னக ரயில்வே துறையின் எல்லைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்றும், அதற்கு வெளியே உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாதென்றும் தென்னக ரயில்வே துறை முடிவெடுத்து அறிவித்தது. ஆனால், ரயில்வே பணித்தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் ரயில்வே பணித்தேர்வு அலகு (ஆர்.ஆர்.சி.) ஆகியவற்றின் மூலம் பணியமர்த்தம் பெறும் வேலைகளுக்கு அனைத்திந்திய அளவில் விண்ணப்பிக்கலாம், தேர்வெழுதலாம் என்ற அநீதி இப்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனால், அண்மையில் தென்னக ரயில்வே துறையில் பணிக்குச் சேர்க்கப்பட்ட 3,218 பேரில் மிகப்பெரும்பாலோர் இந்திக்காரர்களும், மற்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். இதில் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட 541 பேரில் 400-க்கும் மேற்பட்டோர் இந்திக்காரர்களே! தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
பழகுநர் பயிற்சி முடித்தவர்களில் 20 விழுக்காட்டினரை மேற்படி வேலைகளுக்குப் பணியமர்த்தம் செய்ததாகச் சொல்லும் தென்னக ரயில்வே துறை, இந்தப் பணிகளைக் கூட பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வழங்கவில்லை. இதிலும் இந்திக்காரர்களே அதிக இடங்களை ஆக்கிரமித்தனர். இதிலும், ரயில்வே துறையின் இனப் பாகுபாட்டுக்குத் தமிழர்கள் பலியாகி வருகின்றனர்.
ரயில்வே துறையில் திட்டமிட்டு மண்ணின் மக்களாகிய தமிழர்கள் வேலை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறார்கள். இதேபோன்ற தமிழினப் புறக்கணிப்பு நடுவண் அரசின் மற்ற துறைகளிலும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டுள்ளது. மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நடுவண் அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் வடமாநிலத்தவரையும் பிற மாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கிறார்கள். இது தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை உரிமைப் பறிப்பு, வாழ்வுரிமைப் பறிப்பு மட்டுமல்ல, தொலைநோக்கில் தமிழர் தாயக உரிமையைப் பறிக்கும் இன ஒதுக்கல் கொள்கையாகும்.
தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் இந்திய அரசின் ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்தும், இவற்றில் 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இவற்றின் அடுத்தகட்டமாக, தமிழ்த் தேசியப் பேரியக்கம் பொன்மலை ரயில்வே தொழிற்சாலை வாயிலில் 11.09.2020 முதல் 18.09.2020 வரை காலை 10 மணிக்கு ஒவ்வொரு நாளும் ஓர் அணி என்ற நிலையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த உள்ளது.
மண்ணின் மக்களுக்கு வேலையை உறுதி செய்யும் சட்டங்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலைக்கு உறுதியளிக்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
இச்சட்டம் நடுவண் அரசு மற்றும் தனியார் துறை வேலைகளில் 90 விழுக்காடு வேலையும், தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடு வேலையும் தமிழர்களுக்கே என விதிமுறை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தத் தொடர் போராட்டம் நடைபெறுகிறது''.
இவ்வாறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT