Published : 01 Sep 2020 05:53 PM
Last Updated : 01 Sep 2020 05:53 PM
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிக்கான செலவு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க மறுக்கப்படுகிறது என வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று (செப்.1) கூறியதாவது:
"ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், விடுபட்ட கிராமங்களைச் சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, விடுபட்ட பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். 3 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியது. இதனால், பாலாற்றுக்குத் தற்போது தண்ணீர் வருவதில்லை. அதேபோல் மோர்தானா அணைக்கு அருகேயும் ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. அகரம் உள்ளிட்ட துணை ஆறுகளில் இருந்து வரும் வெள்ளத்தால் மட்டும் பாலாற்றுக்கு நீர்வரத்து இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக பாலாற்றின் குறுக்கே ஒரு இடத்தில் கூட தடுப்பணையைக் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
வேலூரில் அம்ருத் திட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை முடிக்கப்படாததால் மக்கள் தண்ணீருக்காகக் கஷ்டப்படுகின்றனர். வேலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை திட்டம் 2010-ல் தொடங்கியது. 9 ஆண்டுகளாகியும் இன்று வரை முடிக்கவில்லை. குடியாத்தம், பள்ளிகொண்டா புறவழிச்சாலை திட்டமும் கிடப்பில் இருக்கிறது.
வேலூர் மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி முடிக்கப்படாமல் இருப்பதால் குண்டும் குழியுமான சாலைகளாக உள்ளன. இப்படி இருக்கும்போது வேலூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது கொடுத்திருக்கிறார்கள் என்றால் மற்ற மாநகராட்சிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
தூய்மையான மாநகராட்சி என்ற கூறி குப்பையைச் சேகரித்து பாலாற்றில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். வேலூர் மாநகராட்சியில் ரூ.10 கோடியில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. 1,000 ரூபாய் மதிப்புள்ள விளக்கை 3,000 விலையில் பொருத்துகின்றனர். அதைப் பராமரிக்க ரூ.10 கோடி என ரூ.20 கோடி திட்டத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விவரங்களைத் திரட்டி வருகிறோம்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக செலவிடப்படும் தொகையில் ஊழல் நடைபெறுகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டால் பதில் அளிக்காமல் இருக்கின்றனர். தகவல் அளிக்கக் கோரி விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளோம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது தமிழக அளவில் 7 சதவீதமாக இருக்கிறது.
வேலூர் சத்துவாச்சாரியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளனர். இந்தப் பணியை விரைவில் தொடங்காவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்".
இவ்வாறு எம்எல்ஏ நந்தகுமார் தெரிவித்தார்.
அப்போது, வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT