Published : 14 Mar 2014 12:00 AM
Last Updated : 14 Mar 2014 12:00 AM
தமிழகத்தில் நடைபெறும் பலமுனைப் போட்டிகள் திமுக-வுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்த அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் ஈட்டும் வெற்றியைப் பொறுத்தே மத்தியில் ஒரு அரசு உருவாகும் என்று தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்பதை நிராகரித்த ஸ்டாலின், அது பத்திரிகைளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கற்பிதம் என்று கூறினார். "மாறாக தமிழகத்தில் ஆளும் அதிமுகவுக்கு எதிராக அலை வீசுகிறது," என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தமிழகம் முழுவதும் பிரயாணம் செய்து பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில், அக்கட்சியின் நட்சத்திர பிரச்சாரகராக வெள்ளிக்கிழமை முதல் களமிறங்கும் ஸ்டாலின் “தி இந்து”வுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
தேர்தலில் எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வீர்கள்?
எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள பல்வேறு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் ஆகியவற்றை மக்கள் மத்தியில் எடுத்து வைப்போம்.
இத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நிகழப்போகும் ஆட்சி மாற்றத்துக்கான முன்னோடியாக அமையும். ஜெயலலிதா ஆட்சியின் மாற்றத்தைக் கொண்டு வராவிட்டாலும் அவருடைய அரசுக்குப் பாடத்தைப் புகட்டும் வகையில் தேர்தல் முடிவுகள் நிச்சயம் இருக்கும். யாரையும் வசைபாடி நாங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டோம்.
உங்கள் அணியில் தேசியக் கட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. இது உங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா? ஏனெனில் உங்களால் மோடியைப் போலவோ, ராகுல் காந்தியைப் போலவோ யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய இயலாதே?
நிச்சயமாக இருக்காது. ஏனெனில் மோடி அலை என்பதே திட்டமிட்டு பத்திரிகைகள் உருவாக்கும் ஒரு கற்பிதம். உண்மை நிலைமை அதற்கு மாறாகவே உள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. தேர்தலில் பல மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் பெறும் வெற்றியே மத்தியில் அரசை உருவாக்கும் என்று நம்புகிறேன். எங்களைப் பொறுத்தவரை கட்சித் தலைவர் கலைஞர் ஏற்கெனவே தெரிவித்துள்ளபடி மோடியும் ராகுல் காந்தியும் இல்லாத மூன்றாவதாக ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்போம்.
காங்கிரஸ் கட்சி உங்கள் கூட்டணியில் முன்பு இருந்தது. அதை ஏன் இம்முறை நிராகரித்துவிட்டீர்கள்?
காங்கிரசைக் கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்பது பொதுக்குழுவில் எடுத்த முடிவு. அதனடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். கூட்டணியில் யாரைச் சேர்க்க வேண்டும் என்பதைவிட யாரை சேர்க்கக் கூடாது என்பதையே நாங்கள் விவாதித்தோம்.
பாஜக ஒரு மதவாதக் கட்சி, காங்கிரஸ் கட்சியானது இலங்கைத் தமிழர்ப் பிரச்சினையிலும் தமிழக மீனவர் தாக்கப்பட்டபோதிலும் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. மேலும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதையும் பொருட் படுத்தாமல் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு கலந்து கொண்டது. ஆகவேதான் காங்கிரஸ் வேண்டாம் என்று முடிவு செய்தோம்.
பாஜக உருவாக்கியிருக்கும் புதிய கூட்டணி யாருக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக திமுக.வுக்குதான். திமுகவின் பலம் அப்படியே குறையாமல் இருக்கிறது. அத்துடன் ஏற்கெனவே இருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் புதிய தமிழகமும் மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்திருக்கின்றன. இக்கட்சிகள் கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. மேலும் இடதுசாரிகளும் அதிமுக அணியில் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பலமுனைப் போட்டிகள் நடக்கும் தேர்தல் எப்போதுமே திமுக பக்கமே வெற்றியைக் கொண்டு சேர்க்கும்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி அவருடைய கட்சி பிரச்சாரம் செய்கிறது. ஒரு தமிழர் பிரதமராக வேண்டும் என்பதற்காக மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா?
முதலில் அந்த எண்ணத்தோடு பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவே இப்போது அதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார் என்பதை அவருடைய தற்போதையே பேச்சு தெரிவிக்கிறது. பிரதமர் கனவு கலைந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியும். இன்று இந்திய அளவில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. தன்னுடைய சொந்த மாநிலத்தையே முன்னேற்ற முடியாதவர் எப்படி இந்தியாவை முன்னேற்றப் போகிறார். மேலும் கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு எப்படி நெருக்கடியைக் கொடுத்தார் என்பதை தமிழக மக்களும் மற்ற மாநில மக்களும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.
திமுகவில் தேர்தலில் நிற்பதற்கு இடம் கிடைக்காதவர்களிடம் அதிருப்தி நிலவுவதாக பல இடங்களில் இருந்து செய்தி வந்திருக்கிறது. அது தேர்தலைப் பாதிக்குமா?
ஒரு தொகுதிக்கு எத்தனை வேட்பாளரை ஒரு கட்சி நிறுத்த முடியும், 900 பேருக்கும் மேற்பட்டவர்கள் மனு செய்திருந்தார்கள். அவர்களிடம் தலைவர் கலைஞர் மற்றும் மூத்தத் தலைவர்கள் 9 நாட்கள் நேர்காணல் நடத்தி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளைக் கலந்தாலோசித்தப் பின்னரே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக போன்ற பெரியக் கட்சிகளில் இதுபோல் இடம் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைவது சாதாரண விஷயம்தான்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து செயல்படத் தொடங்கி விடுவார்கள். தஞ்சையில் டி.ஆர்.பாலுவும் பழனி மாணிக்கமும் இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை 27 புதிய முகங்களை அறிமுகம் செய்துள்ளோம். அனுபவமும் புதுமுகமும் கலந்திருக்கும் கலவையே திமுவின் வேட்பாளர் பட்டியல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT