Published : 01 Sep 2020 04:15 PM
Last Updated : 01 Sep 2020 04:15 PM

முதல்வர் பழனிசாமி கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்க வேண்டும்; பிரதமருக்கு முத்தரசன் கோரிக்கை

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

முதல்வர் பழனிசாமி கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்க வேண்டும் என, பிரதமருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப்.1) வெளியிட்ட அறிக்கை:

"பிரதமருக்கு, முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் நிதியாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.12 ஆயிரத்து 250 கோடியை உடனடியாக வழங்குவதுடன், 2022 மார்ச் 31 வரையிலும் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை முன்பணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு மற்றும் மருத்துவச் செலவினங்கள் அதிகரித்துள்ளதுடன், ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு உதவும் நிவாரண நடவடிக்கைகளிலும் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாலும், அரசின் வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் முதல்வர், மத்திய நிதியமைச்சர், வருவாய்துறை செயலாளர் ஆகியோர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்த இரண்டு யோசனைகளும் மாநில நலனுக்கு எதிரானது என்பதை மெல்லிய குரலில் கூறியுள்ளார்.

இது போன்ற பேராபத்து வரும் என்பதால் தான் ஜிஎஸ்டி வரிமுறைக்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ஆதரவு நிலை எடுத்து மத்திய அரசிடம் சரணடைந்த மாநில அரசு, தற்போது நிதித் தேவைக்கு மத்திய அரசிடம் மன்றாடி வருகிறது. மத்திய அரசு சட்டப்பூர்வ நிதிப் பொறுப்புகளையும் அலட்சியப்படுத்தி வருகிறது.

நிதியாதாரத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ்நாடு அரசின் நிலையினை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசின் முதல்வர் கடிதத்தின் உணர்வுகளை மதித்தும் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய, நிதிப் பாக்கிகளை உடனடியாக முழுமையாக வழங்க, பிரதமர், மத்திய நிதியமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x