Published : 01 Sep 2020 03:48 PM
Last Updated : 01 Sep 2020 03:48 PM

மாவட்ட அலுவலகம் திறக்க 200 பேருடன் ஊர்வலம்: பாஜக தலைவர் முருகன் மீது 2 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சியில் மாவட்ட அலுவலகம் திறக்க 200 பேருடன் ஊர்வலமாக வந்ததாக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது இரண்டு காவல் நிலையங்களில் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில் தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டம் காரணமாக 5 நபர்களுக்கு மேல் கூடுவது, அனுமதியின்றிக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கை மீறியதாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட 200 பேர் மீது கள்ளக்குறிச்சியில் இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று காலை பாஜக கட்சி அலுவலகத் திறப்பு விழா நடந்தது. தியாகதுருவத்தில் பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், அதையொட்டி நடந்த கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியில் 144 தடை உத்தரவை மீறி மாடூர் டோல்கேட்டிலிருந்து சுமார் 250 நபர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு கள்ளக்குறிச்சி வந்து மாவட்ட அலுவலகம் திறந்து வைத்ததற்காகவும், பாஜக தமிழக தலைவர் முருகன் உள்ளிட்ட 200 நபர்கள் மீது 2 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தியாகதுருகம் காவல் நிலையத்தில் 143 (அனுமதியின்றி கூடுதல்), 188 (அரசு உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை) IPC r/w51 of DMAct 3 of ED Act (பேரிடர் மேலாண்மைச் சட்டம்) சட்டத்தின் கீழும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 143 (அனுமதியின்றி கூடுதல்), 188 (அரசு உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை) 269 (தொற்றுப்பரவல் சட்டம்) IPC r/w51 of DMAct 3 of ED Act (பேரிடர் மேலாண்மைச் சட்டம்) படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த எல்.முருகன், ''வழக்குப் போட்டால் போடட்டும். சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். அவ்வாறு வழக்குப் போட்டால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் வழக்குப் போடவேண்டும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x