Last Updated : 01 Sep, 2020 03:26 PM

 

Published : 01 Sep 2020 03:26 PM
Last Updated : 01 Sep 2020 03:26 PM

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை: விவசாயிகள் வலியுறுத்தல்

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

திருச்சி

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

மழை, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பிரதமரின் கிசான் திட்டம் 2018, பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000, 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதனிடையே, விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக இந்த நிதி வரப் பெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டுமென்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று (செப்.1) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் இந்தக் கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், "தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்ட உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த விவசாயிகள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.முகம்மது அலி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஒருங்கிணைப்பாளர் வினோத்மணி, மாவட்டப் பொருளாளர் டி.தனபால், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.சிவகுமார், டி.என்.பி.பிரகாசமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் பி.தர்மா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் இளங்கோவன், பெருகமணி ஊராட்சி மன்றத் தலைவர் கிருத்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x