Published : 01 Sep 2020 12:59 PM
Last Updated : 01 Sep 2020 12:59 PM

வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும்: அய்யாவழி பலாபிரஜாபதி அடிகளார் அழைப்பு

எம்.பி. வசந்தகுமாரின் இறப்பைத் தொடர்ந்து காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வசந்தகுமாரின் மகனும், திரைப்பட நடிகருமான விஜய் வசந்த் களம் இறங்கவேண்டும் என வசந்தகுமாரின் நலம் விரும்பிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையே அய்யாவழி சமயத்தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளாரும் வலியுறுத்தி உள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெறும் கட்சிதான் மத்தியில் அதிகாரத்துக்கு வரும் என்று நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த நம்பிக்கை, கடந்த தேர்தலில் பொய்த்துப் போனது. இந்த நிலையில் இங்கு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உயிர் இழந்துவிட்ட நிலையில் இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி.

இந்த தொகுதியில் குமரி மாவட்டம், தாய்த் தமிழகத்தோடு இணையப் பாடுபட்ட மார்ஷல் நேசமணியின் மறைவுக்குப்பின் கடந்த 1969-ல் இடைத்தேர்தல் வந்தது. இதில் காமராஜர் வெற்றிபெற்றார். அதிலிருந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்கிறது குமரி.

எதிர்வரும் இடைத் தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடவேண்டும் என முதல் குரல் எழுப்பியிருக்கும் அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளாரிடம் பேசினேன். ''பெருந்தலைவர் காமராஜர் வழியில் தூய்மையான பாதையில் கறை படியாத கரத்துடன் அரசியல் நடத்தியவர் வசந்தகுமார். அவரது மறைவு தென்னகத்து மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. இன்று குமரி மாவட்ட மக்கள் வசந்தகுமாரின் மறைவால் கலங்கிப்போய் இருக்கிறார்கள். அவர்களின் தேவையறிந்து வசந்தகுமார் வழியில் சேவைசெய்ய தூய அரசியல் செய்யும் ஆளுமை தேவைப்படுகிறது.

இயற்கை வளம்மிக்க குமரி மண்ணைப் பாதுகாத்து, பெருநிறுவனங்களின் கமிஷன் முறை இல்லாத ஒரு நிலைப்பாட்டை எடுத்து குமரி மாவட்டத்தில் அடுத்த தலைமுறை அரசியல் நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். அரசியல் மூலம் ஆதாயம் தேடிய பலருக்கு மத்தியில், தான் தேடிய ஆதாயங்களையும் அரசியலுக்குச் செலவிட்டு ஏழை மக்களின் கண்ணீரைத் துடைத்த பண்பாளர் வசந்தகுமார். அவரது வழியில் சாதி, மத பேதமற்று அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் நல்ல அரசியல் நடத்த ஒருவர் தேவைப்படுகிறார். வசந்தகுமாரின் புதல்வர் விஜய் வசந்த், அவரது வழியிலேயே அரசியல் களம்கண்டு சேவை செய்யவேண்டும் என்பதே எனது விருப்பம். பெரும்பான்மை குமரி மக்களின் விருப்பமும் இதுதான்'' என்றார்.

பாலபிரஜாதிபதி அடிகளாரின் அரசியல் அழைப்பு குறித்து வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வட்டாரத்தில் கேட்டபோது, ''கட்சித் தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவார்'' என்று தெரிவித்தனர். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் விஜய் வசந்த், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே தனது தந்தைக்காகத் தொகுதி முழுவதும் சுற்றிவந்து வாக்கு சேகரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x