Published : 01 Sep 2020 12:50 PM
Last Updated : 01 Sep 2020 12:50 PM

கரோனா காலத்தில் களையிழந்த திராட்சை விற்பனை: மாற்றுத் தொழிலைத் தேடும் கோவை விவசாயிகள்

கோவை

கோவை - சிறுவாணி சாலையில் இருக்கும் கோவை மாவட்டத் திராட்சை உற்பத்தியாளர் சங்கத்தினர் நடத்தும் நேரடி விற்பனை மையம் யாவரையும் கவர்ந்திழுக்கக்கூடியது. தோட்டத்திலிருந்து நேரடியாகக் கொண்டுவரப்படும் திராட்சைகள் பண்ணை விலைக்கே இங்கு மொத்த விற்பனைக்குக் கிடைக்கும். திராட்சை ஜூஸ் விற்பனையும் களைகட்டும்.

கோவை குற்றாலம், சிறுவாணி, பூண்டி வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோகா மையம் செல்பவர்கள் இங்கே வண்டியை நிறுத்தி, திராட்சை ஜூஸ் குடிக்காமல் செல்வது அபூர்வம். ஆனால், இப்போதெல்லாம் இங்கு திராட்சை விற்பனையே முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து, திராட்சை உற்பத்தியாளர் சங்க மேலாளரான ராமனிடம் விசாரித்தபோது, திராட்சை விவசாயிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

''முன்பெல்லாம் இந்த மையத்தில் நாளொன்றுக்குக் குறைந்தது அரை டன் (500 கிலோ) திராட்சைகள் சாதாரணமாக விற்பனையாகும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 2 டன்னுக்கு (2,000 கிலோ) திராட்சைக்குக் குறையாமல் போகும். ஜூஸும் அமோகமாக விற்பனையாகும். ஆனால், இப்போது ஒரு நாளுக்கு 100 கிலோ திராட்சை விற்பனை என்பதே பெரிய விஷயமாகிவிட்டது. சனிக்கிழமை மட்டும் 150 கிலோ போனால் அதிகம். இங்குள்ள மெஷினில் திராட்சை சாறு பிழிந்துவைத்தால் பாதிக்கு மேல் கீழே கொட்ட வேண்டியிருக்கிறது. எனவே ஜூஸ் போடுவதை நிறுத்திவிட்டோம். எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். இதனால் திராட்சை சாகுபடியை விவசாயிகள் சுத்தமாக நிறுத்திவிட்டனர்.

முன்பு செம்மேடு, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை என சுற்றுவட்டாரக் கிராமங்களில் திராட்சை சாகுபடி அமோகமாக நடக்கும். விதைப்புப் போட்டு பந்தல் கட்டினால் பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு அறுவடைக்கும் கவாத்து செய்து, உரமும், மருந்தும் கொடுத்தால் போதும். பழங்கள் பிடித்துவிடும். 2001-ம் ஆண்டுவாக்கில் இந்தப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் திராட்சை விவசாயம் நடந்தது. அதற்குப் பிறகு வந்த வறட்சியில் அது 2,000 ஏக்கராகக் குறைந்தது. இப்போது கரோனா வந்த பிறகு அது 500 ஏக்கருக்கும் கீழே சென்றுவிட்டது.

பலர் லட்சக்கணக்கில் செலவுசெய்து போட்ட திராட்சைக் கொடிக்கால்களையே (பந்தலையே) அழித்து வேறு விவசாயத்திற்குச் சென்றுவிட்டனர். இன்னும் சிலர், ‘பழம் காய்த்துப் பழுத்தால் தொந்தரவு; அதை யார் அறுவடை செய்வது? அதற்கான கூலிகூட கிடைக்காதே’ என்று கவாத்து செய்யாமல் விட்டுவிட்டார்கள். இப்படியே போனால் இந்தப் பகுதியில இருக்கிற கொஞ்சநஞ்சத் திராட்சை விவசாயமும் அழிந்துவிடும்” என்றார் ராமன்.

பன்னீர் திராட்சை அதிகமாய் விளையும் தேனி கம்பம் பகுதிகளிலும் உற்பத்தி பத்தில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டதாம். வெறுமனே திராட்சை விற்பனையில் பலனடைய முடியாது என்று ஒயின் தொழிற்சாலை அமைக்க உரிமை கோரினார்கள் திராட்சை விவசாயிகள். ஆனால், கரும்புச்சாறு கழிவிலிருந்து (மொலாசஸ்) நம் நாட்டு மதுபானத் தயாரிப்பில் கொள்ளை லாபம் கிடைப்பதால் அதற்கும் முட்டுக்கட்டைகளே விழுந்திருக்கின்றன.

“இன்னும் சில வருடங்கள் வரைக்குமாவது திராட்சை விவசாயம் தாக்குப் பிடிக்கும் என்றுதான் நினைத்திருந்தோம். கரோனா பொதுமுடக்கம் காரணமாக இப்போதே அது சரிவைச் சந்தித்து வருகிறது” என்று வேதனை தெரிவிக்கின்றனர் திராட்சை உற்பத்தியாளர் சங்கத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x