Published : 01 Sep 2020 08:24 AM
Last Updated : 01 Sep 2020 08:24 AM

5 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோயில் இன்று திறப்பு: தரிசனத்துக்கு தினமும் 2,000 பக்தர்கள் மட்டும் அனுமதி - முடிகாணிக்கை செலுத்த, நாழிக்கிணற்றில் நீராட முடியாது

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் திறப்பதை முன்னிட்டு கோயில் முன்பு வளாகப் பகுதியை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று (செப்.1) பக்தர்கள்தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்த கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கோயில் செயல்அலுவலர் சா.ப.அம்ரித் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் தினமும் 2,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்படும். ரூ.250 கட்டணதரிசனம் கிடையாது. பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வடக்கு மற்றும் தெற்கு டோல்கேட் பகுதியில் டோக்கன் கொடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே அனுமதிக்கப்படுவார்கள். ரூ.100 கட்டண தரிசனத்துக்கு டிக்கெட் எடுக்க வேண்டும். காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அபிஷேகம் செய்யவும், முடிகாணிக்கை செலுத்தவும், நாழிக்கிணற்றில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அன்னதானம் பார்சலில் மட்டுமேவழங்கப்படும். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநெறிமுறைகளை கண்காணிக்கசிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில், நவதிருப்பதி கோயில்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சானிட்டைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளும், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய ஏற்பாடுகளும், செய்யப்பட்டுள்ளன.

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை, அர்த்தசாம பூஜையின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சமூகஇடைவெளியை கடைபிடிப்பதற்காக தரையில் வட்டங்கள் வரையும் பணி நடைபெற்றது.

நாகர்கோவில்

அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட கோயில்கள் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

கரோனா பாதிப்பால் கடந்த மார்ச்மாதத்தில் இருந்து கோயில்கள் பூட்டப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகம முறைப்படி பூஜைகள் மட்டும் நடந்து வந்தன.

வழிபாட்டுத் தலங்களைத் திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசுஅனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை மற்றும் ஊர் சமுதாயத்துக்கு உட்பட்டவை என 800-க்கும் மேற்பட்டகோயில்கள் இன்று திறக்கப்படுகின்றன.

இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி கூறும்போது, ``கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட 490 கோயில்களும் இன்று திறக்கப்பட்டு அரசின் வழிகாட்டுதலின்படி வழிபாடுகள் நடைபெறவுள்ளது. கோயிலுக்கு வெளியே கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு பக்தர்கள் சமூகஇடைவெளியுடன் அனுமதிக்கப்படுவர் என்றார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களையும் இன்று திறந்து திருப்பலி, ஜெப நிகழ்ச்சிகள் மேற்கொள்ள ஏற்பாடுநடந்து வருகிறது. கோட்டாறு,குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம் மறைமாவட்டங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள், மாவட்டம்முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயங்கள், பெந்தோகோஸ்தே சபை, ரட்சணிய சேனை உள்ளிட்ட ஆலயங்கள் திறக்கப்படுகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்களிலும் தொழுகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x