Published : 01 Sep 2020 08:15 AM
Last Updated : 01 Sep 2020 08:15 AM
காரைக்கால் நகரப் பகுதியில் புதிதாக கட்டப்படும் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்கால் நகரப் பகுதியில்30 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவதில் சிரமம், கழிவுநீர் கலந்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், பழைய குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் குழாய்கள் பதிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில், காரைக்கால் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், காரைக்கால் நகரப் பகுதியில் ஹட்கோ நிதியுதவியுடன் ரூ.49.45 கோடி மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைத்தல், ராஜாத்தி நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா 2018-ம் ஆண்டு ஜன.10-ம் தேதி நடைபெற்றது.
அடிக்கல் நாட்டு விழாவில், பேசிய புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, பணிகளை உடனடியாகத் தொடங்கி, 9 மாதங்களில் முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை.
இதுகுறித்து காரைக்காலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.எல்.இஸ்மாயில் கூறியது: மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் பணிகள் நிறை வடையவில்லை. நகரப் பகுதியில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணியும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் பணிகளை விரைந்து முடிக்க புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து காரைக்கால் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) ஜி.பக்கிரிசாமி கூறியது: மார்ச் மாத இறுதியில் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியிலிருந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று விட்டதால், பணிகள் நடைபெறவில்லை. செப்.4-ம் தேதி முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும். 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுவிடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT