Published : 31 Aug 2020 06:41 PM
Last Updated : 31 Aug 2020 06:41 PM
மகளின் திருமணத்துக்காகப் பொதுமக்களை அழைக்க முடியாத நிலையில், அவர்களுக்கு உதகை நகரத் திமுக செயலாளர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை நகரத் திமுக செயலாளராக ஜார்ஜ் இருந்து வருகிறார். இவரது மகள் திருமணம் இன்று உதகையில் நடந்தது. பொதுவாகத் திருமணத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விழாவை நடத்துவதும், அவர்களுக்கு விருந்து வைப்பதும் வாடிக்கை.
ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக தற்போது உற்றார், உறவினர்களை அழைக்க முடியாத நிலையில், வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த அவர், திருமணம் நடந்த தேவாலயத்தின் அருகில் உள்ள மைதானத்தில் சமூக இடைவெளியுடன் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருமணம் நடத்த எந்தத் தடையும் இல்லாது இருந்தால் கூட, திருமணத்துக்கு வந்தவர்கள் ஒரு நேரம் உணவை மட்டுமே சாப்பிட்டுவிட்டுச் சென்றிருக்க முடியும். ஆனால், இவர் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியதால், ஏழை எளிய மக்கள் பலரும் அவரையும், அவரது பெண்ணையும் வாழ்த்திச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT