Published : 31 Aug 2020 06:33 PM
Last Updated : 31 Aug 2020 06:33 PM
வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கக் காலம் இது என்பதால் தற்போது மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் அதன் படையெடுப்பு அதிகமாக உள்ளது. அதன் இறக்கைகளில் காணப்படும் வண்ணங்களும், கோலங்களும் பொதுமக்களைக் கவர்ந்துள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை தவிர மதுரையில் வைகை ஆற்றங்கரையோரப்பகுதிகளில் ஆண்டு முழுவதுமே வண்ணத்துப்பூச்சிகள் காணப்படும்.
அதுதவிர, மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு மலைக்குன்றுகள், பசுமையான வளாகத்தைக் கொண்ட மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரி போன்ற இடங்களில் வண்ணத்துப்பூச்சிகள் நிரந்தரமாக காணப்படுவது உண்டு.
இதில், வண்ணத்துப்பூச்சியினங்களுக்காக பிரத்தியேகமாக பூங்கா உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மட்டுமே 70 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கோடைகாலம் முடிந்து வடகிழக்கு பருவமழை காலம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது.
அதனால், இலைகள் உதிர்ந்து மரங்களில் புதிதாக இலைகள் துளிர் விட்டு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதுபோன்ற மிதமான வெப்பமும், குளிர்ந்த காலநிலையும் கொண்ட சீதோஷநிலை வண்ணத்துப்பூச்சிகளுக்கு உகந்த காலம் என்பதாகக் கூறப்படுகிறது.
அதனால், வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வும், இனப்பெருக்கமும் மதுரை மாவட்டத்தில் வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு சற்று அதிகமாக காணப்படுகின்றன.
மிகச்சாதாரணமாகவே அனைவர் வீடுகளிலும் கூட உள்ள மலர் செடிகளில் கூட வண்ணத்துப்பூச்சிகள், புழுவாக இருந்து கூடு கட்டி பூச்சியாக மாறும் இனப்பெருக்கம் செய்யும் நிகழ்வுகளை பொதுமக்கள், குழந்தைகள் கண் கூடாக பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.
மதுரை நகர்பகுதிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகம், அரசு மருத்துவக்கல்லூரி வளாகம், ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி வளாகம் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.
அமெரிக்கன் கல்லூரியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சிகள் காணப்பட்டன.
இந்த வண்ணத்துப்பூச்சியினங்களை கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் தவமணி மற்றும் பேராசிரியர்கள் பார்வையிட்டனர். கல்லூரி பசுமை சங்க மாணவர்கள், பேராசிரியர்கள் துணையுடன் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி விலங்கியல்துறை பேராசிரியர் ராஜேஷ் கூறுகையில், ‘‘உலகம் முழுவதும் 28,000 வண்ணத்துப்பூச்சியினங்கள் உள்ளன. அதில், 17,500 வகை வண்ணத்துப்பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 319 வண்ணத்துப்பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் 2 நாட்களில் இருந்து 11 மாதங்கள் வரை வாழும் பூச்சி.
இவை முட்டை, கம்பளிப்பூச்சி, கிரிஸலிஸ் முதல் பட்டாம்பூச்சி வரை 4 படிநிலைகளில் வளருகின்றன. பெரும்பாலான பட்டாம்பூச்சியினங்கள் வெப்பமண்டலட மழைக்காடுகளில் காணப்படுகின்றன.
குளிந்த காலநிலையை தவிர்க்கவும், இனப்பெருக்கத்திற்காக அவை இடம்பெயருகின்றன. பொதுவாக பட்டாம்பூச்சிகள், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கீழே உள்ள சமவெளிப்பகுதிக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கும் இடம்பெயருகின்றன.
இந்த இடம்பெயர்வில் தாவரங்களை எங்கு கண்டாலும் அவை முட்டையிடுகின்றன. மதுரையில் தற்போது அவை அதிகமாக காணப்படுவதற்கும், அதற்கான சீதோஷனநிலை இங்கு காணப்படலாம். வண்ணத்துப்பூச்சியினங்கள் இருக்கும் இடங்களில் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT