Published : 31 Aug 2020 04:50 PM
Last Updated : 31 Aug 2020 04:50 PM
மீண்டும் முழு ஊரடங்கு வந்தால் நம்மால் தாங்க முடியாது என்பதை உணர்ந்து, அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி பால் பண்ணை பகுதியில் உள்ள புதிய வெங்காய மண்டியில், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தமிழ்நாடு முதல்வரைச் சந்திக்க எங்களுக்கு செப்.2-ம் தேதியன்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியரும் உறுதி அளித்துள்ளார்.
விவசாயத்துடன் பின்னிப் பிணைந்தவர்கள்தான் காய்கனி வியாபாரிகள். விவசாயிகள், காய்கனி வியாபாரிகள் வீழ்ந்துபோவதை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எனவே, 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய காந்தி மார்க்கெட்டில் காய்கனிக் கடைகளைத் திறக்கக் கோரி முதல்வரைச் சந்திக்கும்போது வலியுறுத்துவோம்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் செப்.18-ம் தேதி முதல் படிப்படியாகத் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, சுமார் 1,000 பேர் அங்கு தூய்மை, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலம் முதல் காய்கனி, பழம், பால், மளிகைப் பொருட்களை மக்களுக்கு வியாபாரிகள் விநியோகித்து வருகின்றனர். மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள வியாபாரிகளும் மருத்துவத் துறை, போலீஸார், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கு இணையாகக் கரோனாவுக்கு எதிராகப் போராடி வந்தனர். இதன் காரணமாக வியாபாரிகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
எனவே, முதல்வரை நேரில் சந்திக்கும்போது, கரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு அரசு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளையும் திறக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் அவசியம் என்பதை ரத்து செய்ய வேண்டும். சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்கு இடையூறு இல்லாத வணிகம் நடைபெற வழிவகை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
அதேவேளையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. வியாபாரிகள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், மக்களும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமிநாசினியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, மீண்டும் முழு ஊரடங்கு வந்தால் நம்மால் தாங்க முடியாது என்பதை உணர்ந்து, அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.''
இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.
பேட்டியின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் பலரும் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT