Published : 31 Aug 2020 02:12 PM
Last Updated : 31 Aug 2020 02:12 PM
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ரவுடியை பிடிக்க சென்ற போது, நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு தென் மண்டல காவல்துறை சார்பாக ரூ.86.50 லட்சம் நிதியுதவியை ஐஜி முருகன் இன்று நேரில் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கடந்த மாதம் 18-ம் தேதி துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்துக்கு காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க காவல் துறையினருக்கு தென் மண்டல ஐஜி முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப நிதியுதவி செய்தனர். அவ்வாறு மொத்தம் ரூ.86.50 லட்சம் நிதி திரண்டது.
இந்தத் தொகையை சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து, அதற்கான பத்திரத்தை தென்மண்டல ஐஜி முருகன் இன்று குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்.
ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்தில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டுக்கு நேரில் சென்ற ஐஜி முருகன், அவரது மனைவி புவனேஸ்வரி, தந்தை பெரியசாமி உள்ளிட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், ரூ.86.50 லட்சம் டெபாசிட் பத்திரத்தை அவர்களிடம் நேரில் வழங்கினார்.
அப்போது திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஐஜி முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்மண்டல காவல் துறையினர் சார்பில் மொத்தம் ரூ.86.50 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு மாதம் ரூ.42,420 வட்டி கிடைக்கும்.
சமூக விரோதிகள், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல் துறையினர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விதமான சூழ்நிலை இருக்கும். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஐஜி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT